மைத்திரி, ரணிலை சந்தித்து ஜெனிவா குறித்து பேசவுள்ள ஜெய்சங்கர்!

இலங்கை பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர்,எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இன்று சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அவர் எதிர்வரும் திங்கட்கிழமை வரை கொழும்பில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை வரும் இந்திய வெளிவிவகாரச் செயலர் எதிர்வரும் திங்கட்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் ஏனைய தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்த நாட்டு பிந்திய முன்னேற்றங்களில் இந்தியாவையும் இணைத்துக் கொள்ளும் வகையில், இலங்கையில் தற்போது இந்தியா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களை கண்காணிப்பது தவிர, அபிவிருத்தி மற்றும் வர்த்தக துறைகளில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் ஆராயும் வகையிலான ஒரு வழக்கமான பயணமே இது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பேச்சுக்களில், சீனக்குடாவில் இந்தியன் ஓயில் நிறுவனத்திடம் உள்ள எண்ணெய் தாங்கிகளில் சிலவற்றை, இலங்கை தனது பயன்பாட்டுக்காக மீளப் பெறும் விவகாரம் குறித்தும் ஆராயப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அரசியலமைப்பை வரையும் விடயத்தில் இலங்கை எந்தளவுக்கு பயணித்துள்ளது என்பதையும், போர்க்குற்ற விசாரணைக்கான நீதிப் பொறிமுறையை அமைப்பது தொடர்பாக,எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை எதிர்கொள்ளும் விடயத்தில் இலங்கை எத்தகைய நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் முயற்சிகளிலும் இந்திய வெளிவிவகாரச் செயலர் ஈடுபடுவார்.

எனினும், இந்தச் சிக்கலான விவகாரங்களில் இந்தியாவின் அழுத்தங்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

மீனவர்களின் ஊடுருவல் விவகாரம் குறித்தும் இந்திய வெளிவிவகாரச் செயலர் பேச்சுக்களை நடத்தும் வாய்ப்புகள் உள்ளன.

எனினும், இந்தியா – இலங்கை இடையே எட்கா உடன்பாடு கையெழுத்திடப்படுவது குறித்து இந்தச் சந்திப்புகளில் பேசப்படாது என்றும் கூறப்படுகிறது.

வர்த்தக அமைச்சு மட்டத்தில் நடத்தப்பட்டு வரும் இதுபற்றிய பேச்சுக்கள் அரசியல் முடிவுகளை எடுக்கும் கட்டத்துக்கு வந்த பின்னரே, வெளிவிவகார அமைச்சு மட்டத்துக்கு இந்த விவகாரம் கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.