கோத்தபாயவிடம் இன்று விசாரணை!

முன்னாள் பாதுகப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

தங்க புத்தர் சிலையொன்று தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு கோத்தபாய ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் சந்தஹிரு சேய விஹாரையில் தங்க புத்தர்சிலை ஒன்றை பிரதிஸ்டை செய்தமை குறித்து கோத்தபாய ராஜபக்சவிடம் இன்று வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

விஹாரை நிர்மானிப்பதற்காக நியமிக்கப்பட்ட மாநாயக்க தேரர்கள் புனிதப் பொருட்ளுக்கு மேலதிகமாக தங்கத்திலான சிலை ஒன்றையும், தங்கத்திலான அரச மரமொன்றையும் பிரதிஸ்டை செய்ய வேண்டுமென கோத்தபாய ராஜபக்சவிற்கு அப்போது ஆலோசனை வழங்கியிருந்தனர்.

அதற்கமைய புத்தர் சிலையை அமைக்கும் பணி இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.கடற்படையினர், சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடம் எழுத்து மூலம் விடுத்த கோரிக்கைக்கு அமைய பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு சுங்கத் திணைக்களத்தில் பெற்றுக் கொண்ட தங்கம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.