பிரிட்டன் அரசியின் டுவிட்டர் கணக்கை பராமரிக்க ரூ.30 லட்சம் சம்பளம்

அரசியின் அதிகாரபூர்வ வலைதளத்தில் இந்த வேலைவாய்ப்பு விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் தொலைத் தொடர்பு அதிகாரி என்ற பொறுப்பில் முழு நேரப் பணியாற்றுவதற்கு துடிப்பாகச் செயல்படும் நபர் தேவை என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியின் பணிகளையும் கடமைகளையும் அரச குடும்பத்தின் பல்வேறு மக்கள் நலப் பணிகளையும் வெளியுலகுக்குத் தெரிவிப்பதுதான் அவரது டுவிட்டர் வலைதளத்தின் நோக்கம். அதற்கான சுட்டுரைப் பதிவுகளை அவ்வப்போது எழுதுவது டிஜிட்டல் தொலைத் தொடர்பு அதிகாரியின் முக்கியப் பணியாகும். மேலும், அரசியின் பெயரில் உள்ள பேஸ்புக் கணக்கு, யூடியூப் பதிவுகளையும் டிஜிட்டல் தொலைத் தொடர்பு அதிகாரி பராமரிக்க வேண்டும்.
அந்த அதிகாரியின் ஒவ்வொரு பதிவும் உலகெங்கும் லட்சக்கணக்கான மக்களின் கவனத்தைப் பெறும் என்பதை உணர்ந்து மிகுந்த
பொறுப்புணர்வுடன் அவர் செயல்பட வேண்டும். ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ள அரசியின் எண்ணங்கள், செயல்களின் வெளிப்பாடாக அவருடைய சமூக வலைதளம் அமைந்துள்ளது என்கிற உணர்வுடன் டிஜிட்டல் தொலைத் தொடர்பு அதிகாரி தனது கடமையை ஆற்ற வேண்டும்.
இணையதள தொழில்நுட்பம் குறித்த ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உள்ள பல்கலைக்கழக உயர் கல்வி கற்ற நபர் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபருக்கு படம் பிடிக்கும் திறன், விடியோ செய்திப் படம் தயாரிக்கும் திறன் இருப்பது அவசியம். தேர்வு செய்யப்படும் நபருக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் பவுண்டு (சுமார் ரூ. 30 லட்சம்) ஊதியமாக வழங்கப்படும். ஓய்வூதிய வசதி உண்டு என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் அரசி எலிஸபெத் டுவிட்டர் கணக்கை 27.7 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அது தவிர லட்சக்கணக்கானோர் அவரது வலைதளத்தையும், பேஸ்புக், யூடியூப் கணக்கையும் கண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.