பாகிஸ்தானில் நாடு முழுவதும் காதலர் தினம் கொண்டாட நீதிமன்றம் தடை

உலகமெங்கும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் வாகீத் என்ற நபர், காதலர் தினக் கொண்டாட்டங்களை பாகிஸ்தானில் தடை செய்ய வேண்டும் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இஸ்லாமியக் கலாச்சாரத்தில் காதலர் தினக் கொண்டாட்டங்கள் இடம் பெறவில்லை, எனவே பாகிஸ்தான் முழுவதும் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்குமாறு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு மீது அவசரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்குமாறு, பாகிஸ்தானில் இயங்கி வரும் அனைத்து ஊடகங்களையும், பாகிஸ்தான் எலக்ட்ரானிக் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு முறையும் காதலர் தினத்தன்று ஏதாவது சர்ச்சை எழுவது வழக்கமான ஒன்று. ஆனால், நீதிமன்றம் தலையிட்டு காதலர் தினத்திற்கு தடை விதிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.