நாகதோஷம் போக்கும் கல் கருடன்!!

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.

நாச்சியார் கோவிலில் உள்ள கல்கருடன் உடலில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் அமைந்துள்ளது. இவருக்கு பூஜை செய்தால் நாகதோஷம் நீங்கும். இந்த கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகுசட்டம், முதலியவற்றை வாழைச்சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர் எல்லா இஷ்ட சித்திகளையும் பெறுவர்.

ஆடி மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமி திதியில் வணங்குபவர்களுக்கு குழந்தை பாக்கியமும், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவனும் கிடைப்பார். திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கருடனின் திரு நட்சத்திரமான சுவாதி அன்று, இங்குள்ள கல் கருடனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

இத்தலத்தில் கருடனுக்குத் தனிசிறப்பை போல், சக்கரத்தாழ்வாருக்கும் தனிசிறப்பு உண்டு. கோவிலின் நான்காவது சுற்றில் மடப்பள்ளிக்கு எதிரில் உள்ள தனிசன்னிதியில் இவர் அருள்பாலிக்கிறார். இந்த சுதர்சன ஆழ்வார் சிலை வடிவத்தின் பின் பக்கம், நரசிம்மப்பெருமாள் தரிசனம் தருகிறார். இந்த சக்கரத்தாழ்வார்தான், மணிமுத்தாற்றில் நீராடிய போது, மேதாவி முனிவரின் கையில் கிடைத்தது.

அசரீரி வாக்கு உரைத்தபடி அம்முனிவர் இந்தச் சக்கரத்தாழ்வாரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்துவந்தார். 48 நாட்கள் இந்தப் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும். இந்தக் கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து பஸ்வசதி உண்டு.