ஓரளவுக்குத் தான் பொறுமையாக இருப்பேன்: சசிகலா ஆவேசம்

தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை சசிகலா அளித்திருந்தாலும், உடனடியாக அவரை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை. சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ஓ.பன்னீர்செல்வம் பக்கம் 5 எம்.எல்.ஏ.க்கள், 3 எம்.பி.க்கள் வந்த நிலையில், இன்று முக்கிய அமைச்சரான மாபா பாண்டியராஜனும் வந்து சேர்ந்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக்கோரி சசிகலா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இன்று சந்திக்க அனுமதி கேட்டுள்ளார் சசிகலா.

அதன்பின்னர் போயஸ் கார்டனில் திரண்டிருந்த தொண்டர்களிடையே சசிகலா பேசியதாவது:-

அரசியல் சாசன இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் தமிழகத்தின் நலனை ஆளுநர் காப்பாற்ற வேண்டும். கடந்த 5-ம் தேதி ஆளுநரை சந்தித்தபோது எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து அரசு அமைக்க என்னை அழைக்க வேண்டும் என விரிவாக விளக்கம் அளித்தேன்.

பன்னீர்செலவ்ம முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து 7 நாட்கள் ஆகிவிட்டன. நம்மை பிரித்தாள நினைப்பவர்கள் தோற்றுப்போவார்கள். தொண்டர்கள் இருக்கும் வரை எதற்கும் அஞ்சப்போவதில்லை. எஃகு கோட்டையான அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. நாம் நியாயமாகவும், ஜனநாயகத்தோடும் நம்பிக்கையில் இருப்பதால் பொறுமையாக இருக்கிறோம். ஓரளவுக்குத் தான் பொறுமையைக் கையாள முடியும். அதற்குமேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.