யாழ்ப்பாணத்திற்கு நேற்று வருகைதந்த பாதுகாப்பு, காணி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் அரச உத்தியோகஸ்தர்களுடன் நடத்திய விசேட சந்திப்பில் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்கள் மற்றும் உறவினர், நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ள மக்களினை மீள்குடிறே்றம் செய்தல் மற்றும் காணி இல்லாதவர்களுக்கு காணிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் பலாலியில் நேற்று நடைபெற்றது.
உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் 1950 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் பலாலி விமான நிலையத்திற்கு என சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பாக பேசப்பட்டது.
இதன்போது குறித்த காலப்பகுதிகளில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நட்ட ஈடுகளை வழங்குவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள நலன்புரி நிலையங்களில் காணிகள் அற்ற நிலையில் தங்கியுள்ள 225 குடும்பங்களுக்கு கீரிமலைப் பகுதியில் வீடுகளை கட்டிக் கொடுப்பதாக ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
குறித்த வீட்டுத் திட்ட நிர்மானப் பணிகளை உடனடியாக ஆரம்பித்து அதில் மக்களை குடியேற்ற வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.
மேலும் காணிகள் அற்ற மக்களுக்கு வேறு பகுதிகளில் காணிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் உடனடியாக ஆரம்பிப்பதென்றும் முடிவு எடுக்கப்பட்டது. முதற்கட்டமாக 200 பேருக்கு காணிகள் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமன்றி வலி.வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பிற்குள் உள்ள பகுதிகள் விடுவிக்கப்பட்டு, அக் காணிகளின் உரிமையாளர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்தும் இக் கலந்துரையாடலில் பங்கு கொண்டவர்களினால் இறுக்கமாக வலியுறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும் அம்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கால வரையறை எதனையும் அமைச்சின் அதிகாரிகளால் குறிப்பிட்டு கூறப்படவில்லை.
இச்சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ராஜபக்ஷ, காணி அமைச்சின் மேலதிக செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சின் பணிப்பாளர், யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ்சேனநாயக்க, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் தெல்லிப்பளை, கோப்பாய், உடுவில் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.







