முதல்வராக இருந்த தான் மன உளைச்சலுக்கு ஆளானேன் சில உண்மையை கூறுவதற்கு என்னுடைய மனசாட்சி உந்தியதால் தான் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்ததாக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ஞாயிறன்று ராஜினாமா செய்தார். இதனையடுத்து சட்டசபைக் குழு தலைவராக சசிகலாவை தேர்வு செய்தனர். விரைவில் சசிகலா முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்பட்டது.
சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு தினங்களாக ஓ.பன்னீர் செல்வம் போயஸ்கார்டன் செல்லவில்லை. இதுவே ஒருவித கேள்வியை ஏற்படுத்தியது.
இரண்டு முறை முதல்வராக இருந்து பதவி விலகிய போது அது ஜெயலலிதாவிற்காக பாதுகாத்து வைத்திருந்த பதவியை பத்திரமாக விட்டுக்கொடுத்தார். மூன்றாவது முறையாக ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் 62 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான நிர்பந்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இரண்டு நாட்களாக மவுனமாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பது தெரியாமல் இருந்த நிலையில் திடீரென இரவு 9 மணியளவில் மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீரென கண்ணை மூடி அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக தியானம் செய்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மவுனம் கலைந்து என்ன பேசப்போகிறார் என்பதை கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். திடீரென தியானத்தை கலைத்த ஒ.பன்னீர் செல்வம், மெதுவாக எழுந்து ஜெயலலிதா நினைவிடத்தை சுற்றி வந்து வணங்கினார்.
என்னை முதல்வராக பதவியேற்குமாறு கூறியதால் என்னால் ஆட்சிக்கும் கட்சிக்கும் பங்கம் வரக்கூடாது என்று நான் ஒத்துக்கொண்டேன். சில தினங்கள் கழித்து விஜயபாஸ்கர் வந்து என்னை பொதுச்செயலாளராக சசிகலா வர விரும்புகிறார் என்று திவாகரன் கூறுவதாக கூறினர்.
என்னை சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்து முதல்வரான பின்னர் சசிகலா முதல்வராக வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். இதை பொதுச்செயலாளர் சசிகலாவிடம் கூறினேன். நாங்கள் கண்டிக்கிறோம் என்று கூறினார்கள். செல்லூர் ராஜூ, செங்கோட்டையன், தம்பித்துரை ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தினர். என்னை அசிங்கப்படுத்துவது போல பேசினர். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி விட்டது. நடந்த உண்மைகளை கூறவே இங்கு வந்துள்ளேன் என்று கூறினார் ஓ.பன்னீர் செல்வம்.
அமைச்சர்கள் பலரும் தன்னை அவமானப்படுத்தினார்கள் என்று கூறிய அவர், தன்னை அவமானப்படுத்தினால் தாங்கிக் கொள்வேன். பொது வாழ்க்கைக்கு வந்தால் இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதே நேரத்தில் கட்சிக்கும் ஆட்சிக்கும் ஏதாவது ஒரு பங்கம் என்றால் நான் பொருத்துக்கொள்ள மாட்டேன் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தமிழகத்தின் நலனைக் காக்க தனி ஒருவனாக களமிறங்குவேன் என்றும் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.







