தனியார் மயமாகிறதா இலங்கை? பணம் கொடுத்தால் கல்வி?

இலங்கை தனியார் மயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதா என்னும் ஐயம் இப்பொழுது இலங்கையர்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

நாடு அபிவிருத்திப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக அரசாங்கத் தரப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது.

இல்லை, நாங்கள் இருக்கும் பொழுது அபிவிருத்திகளைச் செய்து கொண்டிருந்தோம். மக்கள் அபிவிருத்திகளை உணர்ந்தார்கள். ஆனால் இன்றோ மக்கள் விரக்தியில் இருக்கிறார்கள் என்கிறது கூட்டு எதிர்க்கட்சி.

இன்னொருபுறத்தில், முன்னாள் ஆட்சியாளர்கள் வாங்கிக் கொண்ட கடனை இப்பொழுது திருப்பிக் கொடுப்பதில் தாம் அதிக சிரத்தை எடுப்பதாகவும், நீண்ட தூர அபிவிருத்தி என்னும் இலக்கை நோக்கி பயணிப்பதாகவும் ஆளும் இன்றைய அரசாங்கம் கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

ஆயினும், இலங்கையின் அபிவிருத்தி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இருந்ததைப் போன்றே இன்றும் சீனாவின் ஆதிக்கம் இயல்பாக இருப்பதனை பொருளாதார நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.

சீனாவின் ஆதிக்கத்தை கூட்டு எதிர்க் கட்சியினரே எதிர்த்ததும், இதற்கு சீனா தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததனையும் அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் தான் இப்பொழுது மாணவர்களின் கோபத்திற்கு இலக்காகியிருக்கிறது மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி.

இலங்கையில் அனைவருக்கும் இலவசக் கல்வி என்று சட்டம் சொல்லுகையில், புதிதாக தனியார் மருத்துவக் கல்லூரிகளை அரசாங்கம் அனுமதிப்பது ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் பொதுமக்கள்.

இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் ஜே.வி.பி “மாலபேயில் அமைந்துள்ள தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்திற்கான தெற்காசிய நிறுவகத்துக்கு (சைட்டம்) அங்கிகாரம் அளிப்பது, இலங்கையின் கல்வித்தரத்தை அரிக்கும். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இந்தத் தீர்ப்பானது, சட்டத்துக்கு விரோதமானது என்று தன்னுடைய கண்டணத்தைப் பதிவு செய்திருக்கிறது.

கடந்த வாரம் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க,

சுகாதார அமைச்சின் மருமகள், சைட்டத்தில்தான் கற்கிறார், ஜே.வி.பி, ஈ.பி.பி.டி ஆகிய இரண்டு கட்சிகளையும் தவிர, ஏனையக் கட்சிகளைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் இங்குதான் கல்விப்பயிலுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

“மாலபேயில் அமைந்துள்ள தனியார் வைத்திய கல்லூரி (சைட்டம்) தொடர்பான வழக்கின் இரு தரப்பினரும், சைட்டத்தை ஆதரிப்பவர்கள். அதனால், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு புதுமையானது அல்ல, அது எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்று தான்”

“நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக ஒருவர், வைத்தியராக வர முடியாமாயின், எமது கிரிக்கெட் சபைக்கும் ஒருவரை இணைத்துக்கொள்ள முடியுமாக இருக்கும்.

சைட்டத்திலிருந்து வெளியேறுகின்ற பட்டதாரிகளை, வைத்தியராக பதிவு செய்யவேண்டுமாயின், தேசிய வைத்திய சபை அதற்கு அனுமதியளிக்க வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சைட்டத்துக்கு ஆதரவான நடவடிக்களையே மேற்கொண்டு வருகின்றார்.

சுகாதார அமைச்சரின் மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவரும் சைட்டம் நிறுவனத்திலே கல்விக் கற்கின்றார்கள். அவ்வாறான நிலையில், சுகாதார அமைச்சர் சைட்டத்தை எதிர்க்கமாட்டார்.

பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பொய் சொல்லி தவறான முறையில் நடத்தப்படுகின்ற இந்நிறுவனத்துக்கு சார்பாக வழங்கிய தீர்ப்பு தவறானதாகும. இந்நிறுவனத்துக்கு, மஹிந்த ராஜபக்ஷவே அனுமதிப்பத்திரம் வழங்கினார். அது தவறான ஒரு விடயமாகும், ஆனால், தற்போது நடைபெறுகின்ற விடயங்களுக்கான முழு பொறுப்பினையும் ஜனாதிபதி மைதிரிபாலவே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இலங்கை போன்ற சிறிய நாட்டுக்குள், தனியார் மருத்துவக் கல்லூரி தேவை இல்லை. வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு எமது நாட்டில் தற்போதைக்கு இல்லை.

இந்தியாவில், இது போன்று தனியார் வைத்திய கல்லூரிகள் காணப்படுவதனால்தான் இந்திய நாட்டு மருத்துவர்களுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது என்றும் அவர் சைட்டத்திற்கு எதிரான தன்னுடைய எதிர்ப்பினை வெளியிட்டிந்தார்.

இதேவேளை, பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுவருகின்றனர்.

கொழும்பிலும், ஏனைய மாவட்டங்களிலும் நடைபெற்ற மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளைக் கொண்டும் மாணவர்களைத் தாக்கியும் போராட்டத்தைக் கலைத்தனர்.

நாட்டின் சொத்தான இலவசக் கல்வியை தனியாருக்குக் கொடுத்து, கல்வியை தனியார் மயப்படுத்த வேண்டாம். கல்வி விற்பனை செய்வதற்கல்ல என்று கோசங்களை எழுப்புகின்றார்கள் பல்கலைக்கழக மாணவர்கள்.

சமூக வலைத்தளங்களிலும் சைட்டத்திற்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்துள்ளதோடு, நாட்டின் இன்றைய நிலைகுறித்து விமர்சிக்கப்பட்டுவருகின்றது.

இதேவேளை கொழும்பு, கண்டி ஆகிய நகரங்களில் உள்ள இரண்டு பிரதான தனியார் வைத்தியசாலைகளை தளமாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதேபோன்று யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையும் பல் வைத்தியசாலையும் தனியார் மருத்துவக் கல்லூரியும் தொடங்குவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது.

மலேசியாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் இணை நிறுவனமாக ஆரம்பிக்கப்படும் இந்த பல் மருத்துவ பீடம், பொது மருத்துவப் பீடமும் ஆரம்பிக்கடவுள்ளது.

பொது மருத்துவப் பீடத்தில் 250 மாணவர்கள் கற்கும் வகையிலும், பல் மருத்துவப் பீடத்தில் 100 மாணவர்கள் கற்கும் வகையிலும் வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில் தான் நாட்டின் கல்முறை உட்பட பெரும்பான்மையான துறைகள் இன்று தனியார் மயமாக்கப்பட்டு வருவதாக கடும் விசனம் வெளியிடுகின்றார்கள் மக்கள்.

எதுவாயினும் நாட்டில் இலவசக் கல்வி முறையினை ஏற்படுத்தி, இலங்கையர்களின் எழுத்தறிவு வீதத்தை அதிகரித்ததோடு, உலக நாடுகளுடன் போட்டி போடக்கூடிய சூழலை இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்திருந்தனர்.

ஆயினும், இலவசக் கல்விமுறையினைக் கொண்டுவருவதன் மூலமாக பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் ஒன்று இரண்டு புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் எதிர்காலம் இதன் மூலமாக சிறக்கும் என்ற வாதிடுவோர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

ஒருபுறம் கடும் எதிர்ப்போடு இந்தப் கல்லூரி விவகாரம் முற்றிக்கொண்டிருக்க, அதற்கு ஆதரவாகப் பேசுவோரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

எது எப்படியிருப்பினும், இந்த தனியார் மயமாக்கலின் சாதக பாதக விளைவுகளை எதிர்வரும் காலங்கள் தான் பதில் சொல்லும்.

உலக நாடுகளின் வளர்ச்சியோடு போட்டி போடவேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை இருக்கிறது.

சர்வதேசம் இன்று தங்கள் கொள்கைளை மாற்றத் தொடங்கியிருக்கிறது. இதற்கு ஏற்றால் போல இலங்கையும் சர்வதேசத்தோடு ஒத்தோட வேண்டியிருக்கிறது.

உள்நாட்டில் எழும் எதிர்ப்பை சமாளித்து இலங்கை அரசாங்கம் எப்படி வெற்றிப்படிக்கட்டுக்களை அமைக்கப்போகின்றது என்பதை காலம் பதில் சொல்லும்.