இந்திய மண்ணில் சாதிப்போம்: வங்காளதேச கேப்டன் முஷ்பிகுர்ரகீம்!!

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

இப்போட்டி வருகிற 9-ந் தேதி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் தொடங்குகிறது.

இதற்காக வங்காளதேச கிரிக்கெட் அணி நேற்று ஐதராபாத் வந்தது.

டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக வங்காளதேச அணி இந்திய ‘ஏ’ அணியுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் (பிப். 5-6) விளையாடுகிறது.

டெஸ்ட் போட்டி குறித்து வங்காளதேச கேப்டன் முஷ்பிகுர்ரகீம் கூறியதாவது:-

இந்திய மண்ணில் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை உலக கிரிக்கெட்டுக்கு சொல்ல விரும்புகிறோம்.

பல ஆண்டுகள் கழித்து இந்தியா வந்து விளையாடுவது பற்றி சிந்திக்கவில்லை. நாங்கள் விளையாடும் விதத்தை பார்த்து இந்தியா எங்களை மீண்டும், மீண்டும் விளையாட அழைக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

இது வரலாற்று சிறப்பு மிக்க போட்டி என்று நம்பவில்லை. என்னை பொறுத்த வரை இது ஒரு மற்றொரு டெஸ்ட் போட்டி இப்போது இந்தியா வந்துள்ள வங்காளதேச அணி வலிமையானது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அணி போல் இல்லை.

சமீபத்தில் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தங்களது பார்மை தக்க வைத்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

ஒரு அணியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இதுதான் அணிக்கு நல்ல பலனை தரும்.

இந்தியா வலுவான அணியாகும். சொந்த மண்ணில் அவர்கள் எப்போதுமே சிறப்பாக விளையாடுவார்கள்.

இந்தியாவுக்கு எதிராக 5 நாட்களும் விளையாடவே விரும்புகிறோம். வெறும் 2 அல்லது 3 நாளில் போட்டியை முடிக்க விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்காள அணி கடந்த 2000-ம் ஆண்டு இந்தியா வந்து டெஸ்டில் விளையாடியது. தற்போது 16 ஆண்டுக்கு பிறகு இந்தியா வந்துள்ளது.