சீனாவில் மனைவி, குழந்தையின் கண் முன்னே கணவரை புலிகள் அடித்துகொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் நிங்போ எனும் நகரத்தில் உயிரியல் பூங்கா உள்ளது.
இந்த பூங்காவிற்கு ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது அவரை பூங்காவில் இருந்த புலிகள் திடீரென தாக்கி, உள்ளே இழுத்துச்சென்றது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள், உடனடியாக அவரச அலாரத்தை அடித்துள்ளனர். இதற்கிடையில் புலியிடம் மாட்டிக் கொண்ட நபர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மேலே எழுந்த போது புலிகள் உடனடியாக அவரின் கழுத்துப்பகுதியைத் தாக்கி மீண்டும் தரையில் இழுத்து வைத்து கடித்துக் கொண்டிருந்தது.
சம்பவம் அறிந்து அங்கு விரைந்த பூங்கா பாதுகாவலர்கள், பட்டாசுகளை கொழுத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் புலிகளை விரட்ட கடும் முயற்சி செய்தனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு புலிகளை விரட்டியடித்து அந்த நபரை மீட்டனர். ஆனால், அதற்குள் அவரை புலிகள் கடித்துக்குதறிவிட்டன.
இதில் பலத்த காயமடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அன்று மாலை பூங்கா மூடப்பட்டது. மனைவி, குழந்தையின் கண் முன்னே கணவரை புலிகள் அடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.