அரசியலில் இருந்து ஓய்வுபெறும் உண்மையான தேவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இருந்திருக்குமாயின் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்யாது ஓய்வுபெற்றிருக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சாலியபுர பிரதேசத்தில் “நாட்டை மாற்றியமைக்கும் ரணிலுடன் முன்னோக்கி செல்வோம்” என்ற தொனிப்பொருளில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அரசியல் ரீதியாக காணப்படும் பிரச்சினை தொடர்பாக தன்னால், பேச முடியாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் போட்டிக்கு வரவில்லை என்றால் தான் ஓய்வுபெறவிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி நுகேகொடை கூட்டத்தில் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதியாக இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதியாக இருந்தாலும் இரண்டு தவணைகள் பதவி வகித்து ஓய்வுபெறுவார்கள்.
மகிந்த ஓய்வுபெற எண்ணியிருந்தால், 18 வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து, ஜனாதிபதியாக ஒருவர் பதவி வகிக்கும் இரண்டு தவணை காலத்தை ஏன் நீக்கினார்?. இரண்டு தவணை என்ற அரசியலமைப்புச் சட்டத்தை அப்படியே வைத்து விட்டு ஓய்வுபெற்று சென்றிருக்கலாமே எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை நடைபெறும் அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக அனுராதபுரத்தில் இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்பு கிடைக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.







