இந்திய தொடரில் ஆஸ்திரேலியா திணறும்: ரிக்கி பாண்டிங் கணிப்பு

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போடடிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 23-ந்தேதி புனேவில் தொடங்குகிறது. கடந்த 2012-ல் ஆஸ்திரேலியா இந்தியா வந்தபோது 4-0 என இந்தியா ஒயிட்வாஷ் செய்தது.

தற்போது அதேமாதிரியான மோசமான தோல்விகளை சந்திக்கமாட்டோம் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.

ஆனால் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், இந்திய தொடரில் ஆஸ்திரேலிய அணி திணறும் என்று கணித்துள்ளார்.

மேலும் இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் குறித்து கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் திணறும் என்று நினைக்கிறேன். எந்தவொரு அணியும் இந்தியா சென்றால் திணறத்தான் செய்கிறது. இந்திய மண்ணில் விளையாடச் செல்லும் அணிக்கு மிகக்மிக கடினமான நிலை ஏற்படுகிறது.

முன்னர் இருந்ததை விட தற்போது இந்தியா தங்களுக்கு ஏற்றவாறு ஆடுகளத்தை தயார் செய்கிறது. நான் இந்தியாவில் ஏராளமான தொடரில் விளையாடியுள்ளேன். உண்மையிலேயே சில கடினமான சூழ்நிலையில் விளையாடியுள்ளோம். ஆனால், முதல் இரண்டு நாட்களுக்கு ஆடுகளம் சிறப்பாக இருக்கும். அதன்பின் அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் மாயாஜாலம் காட்டுவதற்கு ஏதுவாக மாறிவிடும்.

தற்போது இலங்கை தொடரில் என்ன நடந்தது என்று பார்த்திருப்பீர்கள். எப்போதெல்லாம் ஆஸ்திரேலியா அணி துணைக்கண்டத்திற்கு செல்கிறதோ, அங்கெல்லாம் முதல் நாளில் இருந்து ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவால் காத்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற தோல்வியைபோல் இல்லாமல், சரியான போட்டியை ஏற்படுத்துவதற்கான வழியைத் தேட வேண்டும். ஆஸ்திரேலியா அணி ஒருவேளை வெற்றி பெறவிட்டாலும் கூட, இது ஒரு பெரிய விஷயமான நினைக்க மாட்டேன். ஆஸ்திரேலிய மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக்கொண்டுள்ள வீரர்கள், இந்திய சூழ்நிலையிலும் சிறந்த முறையில் விளையாட தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்’’ என்றார்.