‘ஹரே கிருஷ்ணா’ என்ற மந்திரத்தின் அர்த்தம்

ஹரே கிருஷ்ணா மந்திரம், கிருஷ்ணரின் ஒலிப் பிரதிநிதித்துவம் ஆகும். ஆகவே, ஒரு சாதாரண சொல்லின் அர்த்தத்தை ஆராய்வது போல, ஹரே கிருஷ்ண மந்திரத்தின் அர்த்தத்தைப் பற்றி பேச முடியாது.

ஹரே கிருஷ்ணா மந்திரத்தின் அர்த்தம் அதனுள்ளேயே அடங்கியுள்ளது. சாதாரண சொற்களைப் பொறுத்தவரை இது உண்மையல்ல. உதாரணமாக ‘நீர்’ என்னும் சொல், ‘நீர்’ எனும் பதார்த்தத்தை விட வித்தியாசமானது.

நீங்கள் தாகமாக இருக்கும் பொழுது ‘நீர், நீர், நீர்’ என்று கூறினும் நீங்கள் தொடர்ந்தும் தாகமாகவே இருப்பீர்கள். ஆனால் கிருஷ்ணர் அவருடைய நாமத்தில் இருந்து வேறுபட்டவரல்ல.

ஆகவே, நாங்கள் ‘கிருஷ்ணா’ என்று கூறியவுடன் அவர் உண்மையிலேயே தோன்றுகிறார். அவருடைய நாமத்தின் ஒலி அதிர்வில் அவருடைய தன்மைகளான அழிவற்ற தன்மை, அறிவு, ஆனந்தம் என்பவற்றை நாம் அனுபவிக்கலாம். அதுவே ஹரே கிருஷ்ணா மந்திரத்தின் அர்த்தமாகும்.

ஆனால் அதை நீங்கள் உங்கள் புத்தி கூர்மையால் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் ஹரே கிருஷ்ணா மந்திரத்தை ஜெபித்து, அதன் உன்னதமான அர்த்தத்தை நீங்களாகவே அனுபவித்துக் கொள்ள வேண்டும்.