மஹிந்த, கோத்தாவிற்கு தெரிந்தே லசந்த கொலை செய்யப்பட்டார் : பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஆகியோரக்கு தெரிந்தே சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார் என தாம் நம்புவதாக அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

குறித்த லசந்த கொலை தொடர்பில் நேற்றைய தினம் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகள் குறித்து ஊடகங்களிடம் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இந்த சம்பவம் தொடர்பில் எனக்குத் தெரிந்த எல்லா விடயங்களையும் கூறினேன்.

இவ்வாறு வாக்கு மூலமொன்றை பெற்றுக் கொள்ள என்னை அழைத்தமைக்காக புலனாய்வுப் பிரிவிற்கு நன்றி கூறுகின்றேன்.

அத்துடன், லசந்த கொலை தொடர்பில் எனக்கு தொடர்பு உண்டு சில தரப்பினர் காலத்திற்கு காலம் கூறி வருகின்றனர் இந்த கருத்துக்கள் ராஜபக்ச குடும்பத்திற்கு தேவையான வகையிலேயே கூறப்படுகின்றது.

மேலும், அப்போதைய இராணுவத் தளபதி என்ற ரீதியில் எனக்கு தெரிந்த விடயங்களை நான் கூறினேன் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.