மகிந்தவின் மேடையில் ஏற போகும் அமைச்சர்கள்! தடுக்கும் முயற்சியில் இரு பிரதான கட்சிகள்

கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் ஒழுங்கு செய்துள்ள பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளதாக கூறப்படும் சில அமைச்சர்களை தடுக்க ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக்கட்சியும் விசேட நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்னர் ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமரும் தனித்தனியாக சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புரட்சியின் ஆரம்பம் என்ற தொனிப் பொருளில் நுகேகொடையில் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள பொதுக் கூட்ட மேடையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏறவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி இதற்கு முன்னர் கூறியிருந்தது.

இந்த விடயம் தெரியவந்ததை அடுத்து குழப்பமடைந்துள்ள அரசாங்கத்தின் இரண்டு பிரதான கட்சிகளும் அவர்களை தடுக்க உச்சபட்ச முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.

நாட்டை பிளவுப்படுத்தும் அரசியலமைப்பு, தேர்தல் ஒத்திவைப்பு,வாழ்க்கை செலவு அதிகரிப்பு, அரச நிறுவனங்களை விற்பனை செய்வது மற்றும் கொள்ளையடிப்பு எதிராக ஒழுங்கு செய்யப்படும் இந்த பொதுக் கூட்டம் மாதந்தோறும் மாவட்ட மட்டத்தில் நடத்தப்பட உள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிஸ்தர் குறிப்பிட்டுள்ளார்.