வறட்சியால் யாழ். மக்கள் பாதிப்பு : நா.வேதநாயகன்

யாழ் – குடாநாட்டில் நிலவும் வறட்சி காரணமாக 24 ஆயிரத்து 324 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக விவசாய நடவடிக்கைகளில் இதுவரை 30வீதமானவை அழிவடைந்தமையினால் 24 ஆயிரத்து 324 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.

இதுவரை 30 வீதமான நெற்பயிர்களுடன் சிறுதானியங்களும் அழிவடைந்துள்ளன. வறட்சி தொடர்ந்தும் நீடித்தால் 100வீதமான அழிவினை சந்திப்பதனை தடுக்க முடியாத சூழலே தற்போது காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். குடாநாட்டில் மட்டும் நெற்பயிர் மற்றும் சிறுதானியச் செய்கையினை மேற்கொண்டுள்ள விவசாயிகளாக 73 ஆயிரம் பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இனம் காணப்பட்ட விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்ட விவசாயம் அழிவடையும் நிலமையினால் குறித்த குடும்பங்கள் பாரிய அழிவின் விளிம்பில் உள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக பாதிப்படைந்த குடும்பங்களின் எண்ணிக்கையாக வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவில் 940, ஊர்காவற்றுறை 482, காரைநகர் 701 மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் 346 குடும்பங்களுடன், கோப்பாயில் 1242 குடும்பங்களும் பாதிப்படைந்துள்ளனர்.

இதேபோன்று, சங்கானையில் 8 ஆயிரத்து 200, சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவினில் 5 ஆயிரத்து 838, உடுவிலில் 427 குடும்பங்களும், தெல்லிப்பழை பிரதேசத்தில் 1213 குடும்பங்களும், சாவகச்சேரியில் 1420 குடும்பங்களும் பாதிப்படைந்துள்ளனர்.

இவ்வாறே கரவெட்டு பிரதேச செயலாளர்பிரிவில் 2 ஆயிரத்து 830 குடும்பங்களும், பருத்தித்துறையில் 255 குடும்பங்களும் பாதிப்படைந்ததோடு மருதங்கேணியில் 430 குடும்பங்களுமாக மொத்தம் குடாநாட்டில் 24 ஆயிரத்து 324 குடும்பங்கள், இதுவரைக்கும் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும், வறட்சி தொடர்வதன் காரணத்தினால் குறித்த எண்ணிக்கை அதிகரிக்கும் தன்மையே காணப்படுகின்றது என மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார்.