இலங்கையில் வேகமாக பரவிவரும் ஆபத்தான பூச்சிகள்! மக்களே அவதானம்

கொழும்பு – இரத்மலானை பகுதியில் உள்ள வீடுகளிலும் கடற்கரை பகுதிகளிலும் வித்தியாசமான பூச்சி வகைகள் வேகமாக பரவிவருகின்றன.

குறித்த பூச்சிகள் பார்ப்பதற்கு ஈக்களைப்போன்று இருந்தாலும், சிலந்தியின் உடலமைப்பைக் கொண்டும் காணப்படுகின்றது. எனினும் அதன் வாயில் கவ்வி போன்ற கொத்தும் பகுதி உள்ளது.

இதன் மூலமாகவே குறித்த பகுதியிலுள்ள மக்களின் உடலை இவை பதம்பார்க்கின்றன.

இதனால் அந்த பகுதியிலுள்ள பொதுமக்களும் குழந்தைகளும் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதுடன், நோய்கள் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

குறித்த பூச்சி வகைகள் ஆபத்தானவை என்று தெஹிவளை, கல்கிஸை மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவை கடற்கரையோரங்களில் அதிகமாக காணப்படுவதாகவும், யன்னல், கதவு, கண்ணாடி, தளபாடங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் இந்த பூச்சிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பூச்சிகளின் தாக்குதலுக்கு இலக்காகிய குழந்தைகள் களுபோவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், குறித்த ஆபத்தான பூச்சிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.