ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தின் முற்பகுதியைக் கடந்து, நடுப்பகுதிக்குள் நகர்ந்திருக்கிறார். ஆறு ஆண்டுகளைக் கொண்ட அவரது பதவிக்காலம், 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகியது.
2017 ஜன வரி 08ம் திகதியுடன், அவரது முதல் இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது.கடந்து போன இரண்டு ஆண்டுகளும், வரவிருக்கும் நான்கு ஆண்டுகளும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில் சாதாரணமானவையல்ல.
சவால்களுக்கும், சர்ச்சைகளுக்கும் நடுவில் தான், எஞ்சியுள்ள நான்கு ஆண்டுகளையும் கூட அவர் எதிர்கொள்ளப் போகிறார்.
ஏனென்றால், இதற்கு முந்திய கால சீரான அரசியல் ஓட்டம் ஒன்றில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக அவர் இருக்கவில்லை.
இதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிகள் அனைவருமே, இருபெரும் பிரதான கட்சிகளில் ஒன்றின் மூலமே தெரிவு செய்யப்பட்டனர்.
ஆனால் மைத்திரிபால சிறிசேன அவ் வாறு வந்தவரில்லை. பலம்வாய்ந்த ஒரு கட்சிக்குள் இருந்து பொதுவேட்பாளராக வெளியே வந்தவர் தான் அவர்.
அதுவும் அசைக்க முடியாத ஒருவர் என்று நம்பப்பட்ட மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருந்த போதே, அவருக்கு எதிராகப் போட்டியிட முன்வந்திருந்தார்.
பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன, எதிர்பாராத ஒரு நிகழ்வாக வெற்றியைப் பெற்றுக் கொண்டார்.
அதற்குப் பின்னர், சுதந்திரக் கட்சியின் தலைவராகப் பதவியை ஏற்றுக் கொண்டாலும், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒரு அணி அதற்குள் முரண்பட்டு நிற்கிறது.
சுதந்திரக் கட்சிக்குள் ஒரு எதிர்க்கட்சியாக மஹிந்த அணி இருக்கின்ற நிலையிலும், ஐ.தே.க.வும், சுதந்திரக் கட்சியும் கூட்டணி ஆட்சியை அமைத்திருக்கின்ற நிலையிலும், கட்சி ரீதியான மிக வலுவான அடித்தளம் இன்னமும் மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை என்றே கூறலாம்.
எனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியாக இருந்தா லும், மஹிந்த ராஜபக்சவின் அச்சுறுத்தல்கள், ஐ.தே.க.வின் அழுத்தங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே முடிவுகளை எடுக்க முடியும்.
இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளுக்கு இத்தகையதொரு நெருக்கடி இருக்கவில்லை. ஜே.ஆர்.ஜெயவர்த்தன தொடக்கம் மஹிந்த ராஜபக்ச வரையான அவர்கள் அனைவரும், தமது கட்சியின் கட்டுப்பாட்டையும் உறுதியாக வைத்திருந்தனர்.
எதிர்க்கட்சியின் தயவும் அவர்களுக்குத் தேவைப்படவில்லை.மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த சிக்கல் இருப்பதால் தான், கடந்த இரண்டு ஆண்டுகளில் கடுமையான சவால்களைச் சந்திக்க நேரிட்டது.
இனிமேலும் அவர் அந்த சவால்களுக்கு முகம் கொடுத்தே ஆக வேண்டியிருக்கும்.ஏனென்றால், ஒரே அரசுக்குள் நீடிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐ.தே. க.வுக்கும் ஏற்கனவே இழுபறி யுத்தம் தொடங்கி விட்டது.
எப்போது தனித்து ஆட்சியமைக்கலாம் என்று இரு கட்சிகளுமே கனவு காணத் தொடங்கிவிட்டன.ஒன்றையொன்று குறைசொல்வதும், காலை வாரி விடுவதும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் சமநிலை ஒன்றை உருவாக்கி பயணிக்க வேண்டியது ஜனாதிபதியினது முக்கியமான சவால்.
அதேவேளை மஹிந்த ராஜபக்சவும் பகிரங்கமாகவே இந்த ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்ற சூளுரையுடன் கிளம்பி விட்டார்.
அவரால் ஏற்படுத்தப்படக் கூடிய அச்சுறுத்தல்களையும் புறமொதுக்கிவிட முடியாத சிக்கலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இருக்கிறது.
இந்த இரண்டும் தான் அவர் எதிர்கொள்கின்ற சவால்கள் என்று கூற முடியாது. இவையெல்லாவற்றையும் தாண்டி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது.
அவரது வெற்றிக்கு கணிசமான பங்கை அளித்த தமிழ் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகள் மிகவும் சிக்கலானவை.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை என்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக இருக்கின்றன.
ஆட்சி மாற்றத்தின் பின்னர், தமிழ் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அது நிரந்தரமானதல்ல.
பல தசாப்தங்களுக்குப் பின்னர், தமிழ் மக்கள் ஓரளவுக்கு ஜனநாயக சூழலை அனுபவிக்கின்ற வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.
இதனை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் தான்.இந்த ஜனநாயக வெளி நிரந்தரமானது அல்லது நிலையானது என்றும் உறுதியாக கூற முடியாது.
ஆனாலும், ஒரு தற்காலிக ஆறுதலையாவது கொடுக்கின்ற வகையில் அமைந்திருக்கிறது.இன்னமும் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து,வைத்தால் தான், தமிழ் மக்களுக்கு நிம்மதியான சூழல் ஒன்று உருவாகும்.
அத்தகைய சூழலை உருவாக்கும் பொறுப்பு ஜனாதிபதியிடம் இருக்கிறது. அத்தகையதொரு சூழலை ஏற்படுத்தித் தருவதான வாக்குறுதியையும் அவர் தமிழ் மக்களுக்கு அளித்திருக்கிறார்.
இந்த வாக்குறுதியை ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் முதல் பகுதிக்குள் நிறைவேற்றத் தவறியிருக்கிறார்.
அரசாங்கத்துக்குள் இருக்கின்ற இழுபறிகள், நெருக்கடிகளாலும், புறநிலை சூழல்களாலும் இதனை அவரால் செய்ய முடியாமல் போனது.
ஆனாலும், அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்குள் இந்த வாக்குறுதிகளையும், கடப்பாடுகளையும் அவரால் நிறைவேற்றாமல் இருக்க முடியாது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற மற்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற விடயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்ற சந்தேகம் ஏற்கனவே தமிழ் மக்களிடம் எழுந்திருக்கிறது.
காணிகள் விடுவிப்பு, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை, அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற பரவலான கருத்து தமிழ் மக்களிடம் இருக்கிறது.
தமிழர் தரப்பில் உள்ள தீவிரக் கருத்துக் கொண்ட சிலர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கமும் தமிழ் மக்களை ஏமாற்ற முனைகிறது என்று வலுவாக நம்புகின்றனர். அவ்வாறே பிரசாரமும் செய்கின்றனர்.
தமிழ் மக்களிடம் இப்போது ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை மற்றும் அதிருப்திகள் அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதியின் கையில் தான் இருக்கிறது.
தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம், அல்லது ஏமாற்றப்படுகிறோம் என்று தமிழ் மக்கள் உணருகின்ற ஒரு கட்டம் உருவாகி விட்டால், கடந்த கால ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச போன்றவர்கள் பற்றி எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்களோ அந்த வரிசையில் தான், மைத்திரிபால சிறிசேனவும் இடம்பிடிக்க நேரிடும்.
மேற்கூறப்பட்ட அனைத்து ஜனாதிபதிகளும், தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்றவர்களோ, அவர்களின் வாக்குகளினால் ஆட்சிக்கு வந்தவர்களோ அல்ல.ஆனால் மைத்திரிபால சிறிசேன மாத்திரம் இவர்களின் மத்தியில் வேறுபட்டவர். தமிழ் மக்களின் ஆதரவுடன், அவர்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்.
தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏனைய ஜனாதிபதிகளைப் போன்றே தமிழ் மக்களால் கருதப்படுகின்ற நிலை ஏற்பட்டுமானால் அது அவமானத்தையே ஏற்படுத்தும்.
அதுவும், அடுத்த ஜனாதிபதி தேர்தலி லும், மைத்திரிபால சிறிசேனவையே முன்னிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகிறது.
மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறுபான்மையின மக்களிடம் உள்ள ஆதரவைக் கருத்தில் கொண்டே அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிற்பாரேயானால், அவரது வெற்றியை உறுதிப்படுத்த முடியாது போகும்.
ஏமாற்றப்பட்டதாக உணரும் தமிழ் மக்கள் மீண்டும் அதே தவறைச் செய்யத் துணியமாட்டார்கள்.
அப்படியொரு சூழலுக்குள் தமிழ் மக்கள் தள்ளப்படுவார்களா அல்லது அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் வரும் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படுமா?