இனப்பிரச்சினை இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும்..? பொங்கல் வாழ்த்தில் சம்பந்தன்!!

தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பானது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வினைக் காண வழிகாட்ட வேண்டுமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தனது பொங்கல் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் திருநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் எம்மக்களுக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வெய்துகின்றேன்.

உழவர் திருநாள், தமிழர் பெருநாள் என்றெல்லாம் பெருமைப்படும் தைத்திருநாளான இன்று தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் இத் தைப்பொங்கல் விழா மகிழ்வுடன் கொண்டாடப்படுகின்றது.

தை மாதம் பிறக்கும் ஆண்டுத் தொடக்கம் மக்களுக்கு பல எதிர்பார்ப்புக்களை உருவாகும். அந்த வகையில் தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பானது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வினைக் காண வழிகாட்ட வேண்டும்

அந்த தீர்வானது இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்திட வேண்டுமெனவும், இதய சுத்தியுடனான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் இந் நன்னாளில் நாம் நம்பிக்கை கொள்வோம்.

எதிர்பார்ப்புகளும் சவால்களும் நிறைந்த ஆண்டொன்றினுள் காலடி வைத்துள்ள இத்தருணத்தில் இலங்கை வாழ் மக்களிடையே புரிந்துணர்வு, நல்லிணக்கம் ஏற்பட்டு சாந்தி, சமாதானத்துடன் கூடிய சௌபாக்கியமிக்க நாடாக இந்நாடு சிறப்புற, பிறக்கும் தைத்திங்கள் வழிசமைத்திட வேண்டுமென எனது உளம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்த்திக்கின்றேன் என்றார்.