10 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் வற்புறுத்தல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் முதல்- அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்து பேசினார்.

அப்போது அவர் முன்னாள் முதல் -அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த இரண்டு பிரச்சனைகள் குறித்தும் விரிவாக எழுதிய கடிதத்தை அவர் ஓ. பன்னீர் செல்வத்திடம் வழங்கினார்.

முதல்-அமைச்சருக்கு , திருமாவளவன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்களை புத்தாண்டின் போதும் தலைவர்களின் பிறந்த நாட்களின் போதும் நன்னடத்தையின் அடிப்படையில் தண்டனைக் குறைப்புச்செய்து விடுவிப்பது கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது.

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மற்றும் காந்தியடிகள் நூற்றாண்டு காலங்களில் அவ்வாறு சிறைவாசிகள் பல்லாயிரக்கணக்கில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது தாங்கள் அறிந்ததேயாகும்.

அந்த விதத்தில் முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு தற்போது துவங்கவிருப்பதை முன்னிட்டு தமிழக சிறைகளில் பத்து ஆண்டுகளுக்குமேல் தண்டனைக் கழித்துள்ள சிறைவாசிகளுக்குத் தண்டனை குறைப்பு செய்து அவர்களை விடுவிக்குமாறு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டிக்கேட்டு கொள்கிறோம்.

கைதிகளை தண்டனை குறைப்புச் செய்து விடுவிக்கும் நடைமுறை தமிழக அரசால் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒன்றுதான்.

2006 ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறையிலிருந்த 472 ஆயுள் சிறைவாசிகள் தமிழக அரசால் விடுதலை செய்யப்பட்டனர்.

2007 ஆம் ஆண்டு 5 பெண் கைதிகள் உட்பட 190 ஆயுள் சிறைவாசிகளும், 2008 ஆம் ஆண்டு 1406 ஆயுள் சிறைவாசிகளும் தமிழக அரசால் விடுதலை செய்யப்பட்டனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவுகள் 432,433 ஆகியவற்றின் அடிப்படையில் தண்டனை குறைப்புச் செய்து கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது என்பதை 2015 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

இந்திய அளவில் இருக்கும் தண்டனை சிறைவாசிகளில் 55.8 சதவீதத்தினர் ஆயுள் சிறைவாசிகள் என 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவண மைய (என்.சி.ஆர்.பி) புள்ளவிவரம் கூறுகிறது. ஆனால் 69 சதவீத ஆயுள் சிறைவாசிகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இது தேசிய சராசரியைவிட 13 சதவீதம் அதிகமாகும்.

தேசிய குற்ற ஆவண மையத்தின் (என்.சி.ஆர்.பி) அறிக்கையின் படி 2015 ஆம் ஆண்டின் இறுதியில் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறைகளில் உள்ள ஆண் கைதிகளின் எண்ணிக்கை 331 பெண் கைதிகளின் எண்ணிக்கை 15 , ஆக மொத்தம் 346 ஆகும்.

ஆயுள் சிறைவாசிகளில் ஆண் கைதிகளின் எண்ணிக்கை 3289, பெண் கைதிகளின் எண்ணிக்கை 140, ஆக மொத்தம் 3429.

நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகியவற்றோடு ஒப்பிடும் போது நீண்ட காலமாக சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகமாக இருக்கிறது என்பதைத் தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம்.

இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரின் நூற்றாண்டையொட்டி பத்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை காலத்தைக் கழித்துள்ள கைதிகள் அனைவரையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது பொதுச்செயலாளர் ரவிக்குமார், துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, எஸ்.எஸ். பாலாஜி உடனிருந்தனர்.