காதி காலண்டர்களில் மகாத்மா காந்தி படத்துக்கு பதில் மோடி படம் : ஊழியர்கள் எதிர்ப்பு!

மத்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் கமி‌ஷனின் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு சமயத்தில் காலண்டர்கள் டைரிகள் வெளியிடப்பட்டு வருகிறது.

வழக்கமாக காதி கிராமத் தொழில் கமி‌ஷனின் காலண்டர்களில் மகாத்மா காந்தி ராட்டையில் நூல் நூற்பது போன்ற படம் இடம் பெறும். இந்த ஆண்டு காலண்டர்களில் மகாத்மா காந்தி படம் இடம் பெறவில்லை.

அதற்கு பதில் பிரதமர் நரேந்திர மோடி ராட்டையில் நூல் நூற்பது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. காதி-கிராமத் தொழில் நிறுவனத்தின் டைரிகளிலும் மகாத்மா காந்தி படத்துக்கு பதில் மோடி படம் அச்சிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் இதே போன்றுதான் காலண்டர்கள் இடம் பெற்றன. காதி நிறுவனத்தின் காலண்டர்களில் மகாத்மா காந்தி படம் இடம் பெறாததற்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த ஒரு வாரமாக அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். நேற்று அவர்கள் மும்பை காந்தி சிலை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து காதி கிராமத் தொழில் கமி‌ஷன் தலைவர் வினய்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

காதி காலண்டர்களில் காந்தி படம் இடம் பெறாதது இது முதல் தடவை என்பது போல தகவல் பரப்புகிறார்கள். அதில் உண்மை இல்லை. 2013-ம் ஆண்டில் இருந்தே மகாத்மா காந்தி படம் இடம் பெறவில்லை. எங்களுக்கு காந்தியை அவமதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை.

காதி மேம்பாட்டுக்கு பிரதமர் மோடியின் பங்களிப்பும் உள்ளது. அவரது நடவடிக்கைகளால் காதி விற்பனை நாடு முழுவதும் 37 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

என்றாலும் காதி கிராமத் தொழில் ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.