நல்லிணக்க செயலணியின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் புறக்கணித்துள்ளமை குறித்து சர்வதேச மன்னிப்பு சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சம்பா பட்டேல் இது குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
700 பக்கங்களை கொண்ட முக்கிய பரிந்துரைகளை கொண்ட அறிக்கையை இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க பொறிமுறை செயலணி கடந்த 03 ஆம் திகதி வெளியிட்டது.
ஆனால், ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ அந்த அறிக்கையை கையேற்கவில்லை. இதேவேளை, நாட்டின் நீதியமைச்சர் இந்த பரிந்துரைகள் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.
சுமார் 7 ஆயிரம் இலங்கையர்கள் மத்தியில் பெறப்பட்ட தரவுகளை கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகள் மீது அரசாங்கம் கரிசனை கொள்ளவில்லை.
காணாமல் போன மற்றும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உண்மையான அர்ப்பணிப்பை காட்ட வேண்டுமானால், நல்லிணக்க செயலணியின் பரிந்துரைகள் மீது கவனத்தை செலுத்த வேண்டும் என பட்டேல் கோரியுள்ளார்.
நல்லிணக்க செயலணியின் பரிந்துரைகளை பொறுத்த வரையில் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றிய யோசனைகளுக்கு அமைய நல்லிணக்கம், மீண்டும் இடம்பெறாமை உட்பட்ட பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த பரிந்துரைகள் பொதுமக்களிடம் இருந்து கிடைந்த சுமார் 7 ஆயிரம் யோசனைகளை மையப்படுத்தியே முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே, இலங்கை அரசாங்கம் இந்த பரிந்துரைகள் தொடர்பில் தமது முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, சர்வதேச சட்டங்களுக்கு புறம்பான மரணங்கள், காணாமல் போதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.







