ரூபாவின் பெறுமதியை ஸ்திரமற்றதாக்க முயற்சிக்கப்படுவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
கொழும்பு ஊடகங்களில் கருத்து வெளியிட்ட போது நிதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ரூபாவின் பெறுமதியை ஸ்திரமான நிலையில் பேணிப் பாதுகாத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
எனினும் மத்திய வங்கியின் சிலர் ரூபாவின் பெறுமதியை ஸ்திரமற்றதாக்க முயற்சிக்கின்றனர். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனரது விசுவாசிகள் இவ்வாறு முயற்சிக்கின்றார்கள்.
எதிர்வரும் நாட்களில் இந்த சூழ்ச்சியுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது அடையாளப்படுத்தப்படும்.
ரூபாவின் மெய்யான பெறுமதியை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக இரண்டு மாத கால அவகாசம் தேவைப்படுகின்றது.
எனினும் அரசாங்கத்தின் இந்த முயற்சியை தோற்கடிக்க சிலர் முயற்சிக்கின்றனர். நிதி கொள்கைகளை பின்பற்றுவதாகத் தெரிவித்து இவ்வாறு சூழ்ச்சி செய்ய முயற்சிக்கின்றனர்.
இன்று உலக அளவில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது, மீளவும் ரூபாவின் பெறுமதி ஸ்திரமாகும். சிலர் இதனை தடுக்க முயற்சிக்கின்றமை வருத்தமளிக்கின்றது.
நிதி அமைச்சர் அல்லது பிரதமர் ஒர் விடயம் கூறினால் அதுவே நாட்டின் கொள்கையாகும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக 480 மில்லியன் டொலர்களையே பெற்றுக் கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அண்மையில் கூறியிருந்தார்.
அவ்வாறு என்றால் எஞ்சிய 620 மில்லியன் டொலர்களுக்கு என்ன நேர்ந்தது. இந்தப் பணத்தை எவ்வாறு செலவிட்டார்கள் என்று நான் கேள்வி எழுப்புகின்றேன்.
கடன் தொகை பெற்றுக்கொண்டதனை மஹிந்தவின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஒப்புக்கொள்கின்றார் அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன.
கடன் பெற்றுக் கொண்ட 620 மில்லியன் அமெரிக்க டொலர் யாருடைய சட்டைப் பைக்குள் சென்றது? என நிதி அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.







