முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை இந்த அரசாங்கம் முன்வைக்காது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டாக்டார் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருந்த அரசியல் அமைப்பானது, நாட்டை பிராந்தியங்களாக பிரித்து சமஸ்டியையும் தாண்டிய அதிகாரங்களை வழங்கும் வகையில் காணப்பட்டது.
எனினும் தற்போதைய அரசாங்கத்தின் உத்தேச புதிய அரசியல் அமைப்பானது அவ்வாறான ஓர் அதிகாரப் பகிர்வு பற்றி பரிந்துரை செய்யவில்லை.
சந்திரிக்காவின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையிலான யோசனை ஒன்றை, அரசியல் உருவாக்கம் தொடர்பில் கடமையாற்றிய அப்போதைய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முன்வைத்திருந்தார்.
எனினும் நான் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன்.
நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை எதிர்க்கின்றோம். அதனால் மீளவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் தேர்தல் நடத்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.






