டோனியை கேப்டன் பதவியில் இருந்து விலகும்படி கேட்கவில்லை: எம்.எஸ்.கே. பிரசாத்!

இந்திய அணியின் சாதனை கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் டோனி. கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர், கடந்த சில நாட்களுக்கு முன் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனால் அணியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்திருந்தார்.

இதனால் விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டோனியின் கேப்டன் பதவி காலங்களில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வெற்றிகள் குறித்து அனைவரும் பாராட்டி வரும் நிலையில், டோனி தன்னிச்சையாக கேப்டன் பதவியில் இருந்து விலகவில்லை. தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் ரஞ்சி டிராபி அரையிறுதியின் போது டோனியிடம் சென்று கேப்டன் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை வெளிப்படுத்தியது.

டோனிக்கே இந்த நிலைமையா? என்று ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். இந்நிலையில் நான் அவரிடம் ஓய்வு பெறுங்கள் என்று கூறவில்லை என்று எம்.எஸ்.கே. பிரசாத் கூறியுள்ளார்.

இதுகுறித்து எம்.எஸ்.கே. பிரசாத் கூறுகையில் ‘‘கேப்டன் பதவியில் இருந்து விலகுமாறு டோனிக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்கவில்லை. அது அவரது தனிப்பட்ட முடிவு. ஜார்க்கண்ட் – குஜராத் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி தொடரின் அரையிறுதிப் போட்டியின் போது டோனி என்னிடம், அவரது ராஜினாமா குறித்து தகவல் தெரிவித்தார்’’ என்றார்.