பேட்ஸ்மேன் தரவரிசை: விராட் கோலியை துரத்தும் கேன் வில்லியம்சன்

இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுபவர்கள் விராட் கோலி (இந்தியா), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து). இவர்களிடையே ரன் குவிப்பதில் கடும்போட்டி நிலவி வருகிறது.

ஒருநாள் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், கடைசியாக அவர் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் இரட்டை சதங்கள் அடித்து அசத்தினார். இதனால் டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பின்தங்கியுள்ளார். டெஸ்ட் தரவரிசையில் முதல இடத்தில் இருக்கும் அவர், ஒருநாள் போட்டியில் 10-வது இடத்திலும், டி20 கிரிக்கெட்டில் 10-வது இடத்திற்கு மேலும் உள்ளார்.

மூன்று வகை கிரிக்கெட்டிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கிறார். ஆனால், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 7-வது இடத்தில் உள்ளார்.

நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4-வது இடத்திலும், ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 5-வது இடத்திலும் இருந்தார்.

நேற்றுடன் முடிவடைந்த வங்காள தேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து அணி 3-0 எனக்கைப்பற்றியது. இதில் கேன் வில்லியம்சன் 145 ரன்கள் சேர்த்தார். கடைசி போட்டியில் 57 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் தரவரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

விராட் கோலியை அடுத்து கேன் வில்லியம்சன் முதல் ஐந்து இடத்திற்குள் நுழைந்துள்ளார். இதன்மூலம் கேன் வில்லியம்சன் விராட் கோலிக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறார்.