இந்தி நடிகர் ஓம்புரி மாரடைப்பால் திடீர் மரணம்!

அரியானா மாநிலத்தில் வாழ்ந்துவந்த பஞ்சாபி குடும்பத்தில் 18-10-1950 அன்று பிறந்த ஓம்புரி, பாலிவுட்டில் தயாரான இந்திப் படங்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான், பிரிட்டன், மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

பல்வேறு கலைப்படங்களிலும் தனது நடிப்பு முத்திரையை பதித்துள்ள ஓம்புரி தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி மற்றும் தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவராவார்.

1970-களில் இந்திய திரைப்படத் துறையில் ‘கலைப்படங்கள்’ எனப்படும் ‘ஆர்ட் பிலிம்ஸ்’ இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்த ஓம்புரி, சுமார் நூறு திரைப்படங்களில் பல்வேறு குணச்சித்திர பாத்திரங்களில் தனது நடிப்பாற்றலை நிரூபித்துள்ளார்.

குறிப்பாக, பாவ்னி பவாய், அர்த் சத்யா, சட்காட்டி, மிர்ச் மசாலா, தாராவி மற்றும் கமல்ஹாசன் இயக்கத்தில் உருவான ‘சாச்சி-420’ (அவ்வை சண்முகியின் தழுவல்) ஆகியப் படங்களில் இவரது தனித்தன்மையான நடிப்பை காணலாம்.


இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது தயாரிப்பு நிலையில் இருக்கும் நான்கு படங்களில் நடித்து வந்தார்.

வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல்வேறு பிலிம்பேர் விருதுகளையும், இருமுறை தேசிய விருதுகளையும், சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதையும், பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ள ஓம்புரி, இன்று காலை மாரடைப்பால் மும்பையில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும், பல்வேறு துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.