வீரராக ஓய்வு பெற்றிருந்தால் டோனி வீட்டின் முன் தர்ணா இருந்திருப்பேன்: கவாஸ்கர்

இந்திய அணியின் வெற்றி கேப்டனாக வளம் வந்தவர் மகேந்திர சிங் டோனி. இந்திய அணிக்கு டி20, 50 ஓவர் ஒருநாள் மற்றும் சாம்பியன் டிராபி ஆகிய கோப்பையை வாங்கிக் கொடுத்தவர் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற டோனி, நேற்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘கேப்டன் பதவியை ராஜினாமா செய்த டோனியின் முடிவை பாராட்டுகிறேன். கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியில் தொடர்ந்து விளையாட வேண்டும். அப்படி இல்லாமல் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால், அணியில் மீண்டும் விளையாட வற்புறுத்தி அவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டம் இருந்திருப்பேன்.

ஒரு வீரராக அவர் இன்னும் அபாயகரமான வீரர்தான். ஒரு ஓவரில் போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக மாற்றும் வல்லமை படைத்தவர். இந்திய அணிக்கு அவர் முக்கியம். அவர் அணியின் ஒரு வீரராக இருப்பேன் என்ற முடிவு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது’’ என்றார்.