அதிமுக கட்சியில் இருந்து விலகிய அக்கட்சியின் கொள்ளை பரப்பு இணை செயலாளர் நாஞ்சில் சம்பத் முதல் முறையாக தனது மனைவி சசிகலா குறித்து நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அவர் மனம் திறந்து கூறியதாவது, எனக்கு 1989 ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த முதல் நாளே நான் அரசியல் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுவிட்டேன்.
அன்று ஆரம்பித்த இந்த அரசியல் பயணம் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எனது வாழ்நாளில் அனைத்து விடயங்களிலும் எனது மனைவி எனக்கு உதவியாக இருந்துள்ளார்.
ஒரு கணவனாக இருந்து அவளுக்கு செய்ய வேண்டியவற்றை நான் செய்யவில்லையே என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இன்று வரை இருக்கிறது.
7 மத்திய சிறைச்சாலைகளிலும் வாசம் செய்தவன் நான். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவன். சிறைச்சாலைக்குள் தாக்கப்பட்டவன்.
மேடையிலேயே வத்தலக்குண்டில், குளித்தளையில் தாக்கப்பட்டவன். நான் காயம் பட்டு வீட்டுக்குச் செல்லும் போது கண்ணீர் சிந்தி அழுதிருக்கிறாளே தவிர, இனிமேல் மேடைக்கு போகக்கூடாது என்று ஒரு போதும் சொன்னதில்லை.
அந்த அளவுக்கு என்னை புரிந்துவைத்துள்ளாள். கடந்த 8 மாதகாலமாக மேடையில் பேசுகிற வாய்ப்பு எனக்கு கிடைக்காத போது, நகைகளை அடகு வைத்து குடும்ப பொறுப்பினை பார்த்துக்கொண்டாள்.
என்னுடைய சுமைகளை அனைத்தையும் தாங்கியுள்ள சுமைதாங்கி அவள் என மனம் கூறியுள்ளார்.