மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த பிறகு புதிதாக ரூ.2 ஆயிரம் நோட்டை அறிமுகம் செய்துள்ளது. மாறுபட்ட வடிவத்தில் உயர்தர தொழில்நுட்பத்துடன் அந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள் உள்ளன. கள்ள நோட்டுகள் தயாரிப்பவர்கள் அச்சிட இயலாத அளவுக்கு அந்த நோட்டுகளின் தரம் உள்ளது.
மத்திய அரசு வெளியிடும் புதிய ரூபாய் நோட்டுகள் அனைத்திலும் தேசத் தந்தை மகாத்மா காந்தி படம் இடம் பெறுவதுண்டு. புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தி படம் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மத்திய பிரதேச மாநிலம் சியோப்பூர் மாவட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வினியோகம் செய்த புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் இல்லாமல் இருந்தது. அச்சிடும் போது எப்படியோ மகாத்மா காந்தி படம் இடம் பெறாமல் போய் விட்டது.
அதைப் பார்த்த போது மக்கள் அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கள்ள ரூபாய் நோட்டுகளாக இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். அவர்கள் அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்தனர்.
அந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டது. வங்கி அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், “அச்சிடும் பணியில் நடந்த தொழில்நுட்ப கோளாறால் காந்தி படம் விடுபட்டுள்ளதாக” விளக்கம் அளித்தனர்.