புதிய ஆண்டில் 25 இலட்சம் சுற்றுலா பயணிகளை வரவேற்பதே அரசின் நோக்கம்..!

இந்த ஆண்டில் 25 இலட்சம் சுற்றுலா பயணிகளை வரவேற்க எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதுடன் கடந்த ஆண்டை விடவும் இம் முறை சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டுநாயக்க விமான நிலையம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை சில மணித்தியாலங்களுக்கு மூடப்படவுள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகையில் தாக்கம் செலுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், இந்த விடயம் குறித்து அதிகாரிகள் மட்டத்தில் கவனம் செலுத்தப்படுகின்றது.

இந்த விடயத்தில் இயன்றளவு சிறப்பாக செயற்பட்டு எதிர்பார்த்த இலக்கை அடைவதுடன், அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இலங்கையின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக உலகின் பல்வேறு நகரங்களில் விளம்பரப்படுத்தல் திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய துறையாக விளங்குவது சுற்றுலாத்துறையாகும். சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக விளங்குகின்றது.

சுற்றுலாத்துறை போக்குவரத்து உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை மற்றும் சுற்றுலா சேவைகள் ஆகிய ஐந்து துறைகளைச் சார்ந்துள்ளது. இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகள் மூலம் அதிக வருவாயை ஈட்டிக்கொள்ள முடியும்.

இதேவேளை, 2016 ஆம் ஆண்டில் 20 இலட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.