சகுனிகளின் ஆட்டம் ஆரம்பம்..!

நாட்டில் தற்போது இரு விடயங்கள் கூட்டு எதிர்க்கட்சியினருக்கு சாதகமான விடயமாக மாறியுள்ளது. ஒன்று புதிய அரசியலமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நல்லாட்சியின் உறுப்பினர்கள், மற்றைய விடயம் நல்லாட்சியை விட்டுப்பிரிந்து சென்ற உறுப்பினர்கள்.

இந்த இரு அஸ்திரங்களையும் கையிலெடுத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக சிலர் பல பிரச்சாரங்களை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளின் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த பிரியங்கர ஜயரட்ன தமது பதவியை துறந்திருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான இவர் தமது பதவியை துறந்துள்ளதுடன் ஐக்கிய தேசியக்கட்சி மீது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயத்தை கையிலெடுத்துக்கொண்ட கூட்டு எதிர்க்கட்சியினர் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களும் எம்முடன் இணைந்துகொள்வார்கள் என்று மார்தட்டுகின்றனர்.

இதில் இருவரை முக்கியப்படுத்தியதோடு அவர்களின் விபரங்களை வெளியிட மறுத்து விட்டனர். இந்த விடயம் மஹிந்த ஆதரவாளர்களுக்கு கிடைத்துள்ள முக்கிய விடயம்.

அடுத்த அஸ்திரம் புதிய அரசியலமைப்பு..

நாட்டில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி பல்வேறு யோசனைகளை முன்வைக்கின்றன. ஆனால் ஒவ்வொரு யோசனைகளும் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.

இதனால் கட்சிகளுக்கிடையில் உட்பூசல்கள் ஏற்படுகின்றன. இதை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் கூட்டு எதிர்க்கட்சி பலம் பெற்றிருக்கும் என்றும் விமர்சிக்கின்றார்கள்.

எந்த வழியிலும் நாளுக்கு நாள் தமது பக்கம் ஆதரவு அதிகரிக்கின்றது என்றே கூறுகின்றார்கள் கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் சகுனிகள்.

இவர்களுக்கு இந்த அளவு நம்பிக்கை பிறந்திருப்பதற்கு முக்கிய காரணம் முன்னாள் ஜனாதிபதியின் கூற்றுதான் என்றால் மிகையாகாது.

நல்லாட்சியில் நடைபெறும் சில முரண்பாடுகளை நோக்குமிடத்து அனைவருக்குமே ஒரு சந்தேகம் ஏற்படத்தான் செய்கின்றது. தற்போது சூப்பர் அமைச்சர் பதவி என்ற ஒரு கருத்து அடிபடுகின்றது.

இந்த பதவிக்கு மாகாண சபைகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் நல்லாட்சியில் இருக்கும் அமைச்சர்களோ “யார் எதிர்த்தாலும் இந்த சட்டமூலம் அமுல்படுத்தப்படும்” என்று அடித்துக்கூறுகின்றார்கள்.

அரசு தரப்பிலிருந்தோ மாகாணசபைகளின் தீர்மானங்களுக்கு எதிராக கருத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இந்த சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு விட்டு அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கின்றார்கள். இவ்வாறு அரசாங்கத்திற்குள் காணப்படும் சில தளம்பல் நிலைகளை தமது அஸ்திரமாக எடுத்துக்கொண்டு நாட்டையும் நாட்டு மக்களையும் துண்டாடும் நடவடிக்கையில் பலர் செயற்படுவதை அனைவரும் காணக்கூடியதாக உள்ளது.