நாட்டின் அரசியலில் தற்போது ஒரு பதற்றமான சூழல் உருவாகி வருகின்றது. அதே போன்று நேற்று முதல் அனைவரையும் ஒரு பரபரப்பு சூழலிற்குள் தள்ளிய விடயம் தான் முன்னாள் போராளிகளின் போராட்டம்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் நேற்று கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு முன்னிலையில் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் புலி உறுப்பினர்கள் தாங்கள் புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்த காலம் முதல் நிரந்தர தொழில் இன்றி பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வருவதாகவும், புனர்வாழ்வு பெற்ற காலத்தில் தங்களுக்கு பண்ணை பயிற்சியே வழங்கப்பட்டது என்றும் எனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலைவாய்ப்பை வழங்குமாறும் கோரி நின்றனர்.
அரசாங்கம் தம்மை கைது செய்து புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கி சமூகத்துடன் இணைத்து பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமக்கான நிரந்தர தொழிலைப் பெற்றுக்கொடுக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
புனர்வாழ்வு பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த அதிகாரிகள் வாழ்வாதாரத்திற்காக கைத்தொழில் செய்ய உதவிகளையும், தொழில் வாய்ப்புகளையும் வாக்குறுதிகளையும் வழங்கியதாகவும் தற்போது தம்மால் கிராம சேவகரின் சான்றிதழை பெற்றுக்கொள்வதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அரச மற்றும் தனியார் வங்கிகள் தமக்கு கடனுதவியை வழங்க கூட மறுத்துள்ளனர். அங்கவீனர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைந்தாலும் பலர் மத்தியில் வேறுப்படுத்தியே பார்க்கப்படுகின்றனர். அவர்களின் அடிப்படை உரிமைகளை கூட பெற்று கொள்ள முடியாத இக்கட்டான சூழலிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சில பெண் முன்னாள் போராளிகள் குழந்தைகளுடன் வேலைவாய்ப்பு கோரி காத்திருந்த பரிதாபமான சம்பவங்களும் இடம்பெற்றது. இந்த போராட்டமானது நியாயமான ஒன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து இரண்டாவது ஆண்டு பூர்த்தியாகவுள்ளது.
இந்த நிலையில் மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படுமா? இல்லை பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வரும் முன்னாள் புலி உறுப்பினர்களின் போராட்டங்களும் கோரிக்கைகளும் மட்டுமே முன் வைக்கப்படுமா?
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எவ்வாறான தீர்மானங்களை எடுப்பார்கள் என்பது தற்போது மக்கள் மத்தியில் எழும் கேள்வியாக உள்ளது.