ஜெயலலிதா நாற்காலியில் அமர்ந்த சசிகலா: பொதுச்செயலாளராக பதவியேற்பு!

அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா இன்று பொறுப்போற்றுக்கொண்டார்.

பொதுச் செயலாளராக பதவியேற்க சசிகலா போயஸ் கார்டனில் இருந்து நண்பகல் 12.04 மணிக்கு கட்சியின் தலைமை அலுவலகத்துக்குப் புறப்பட்டார்.

அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களது வரவேற்பை பெற்றுக் கொண்ட சசிகலா, அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் அறையில் ஜெயலலிதா நாற்காலியில் சசிகலா அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.