வடக்கு – கிழக்கு பகுதிகளில் மழை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும்!

இவ் வருடம் பருவ மழை விவசாயிகளின் தேவைக்கேற்றவாறு பெய்யாததால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட விவசாய நிலங்கள் நீரின்றி அழிந்துள்ளதாக விவசாய திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரட்சி நிலை இவ்வாறு இருக்கையில், நேற்று அதிகாலையில் திடீரென மட்டக்களப்பில் பெரும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இம்மழை பகல் வேளையிலும் இடையிடையே பெய்தது.

நேற்று காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சி பாசிக்குடாவில் பதிவாகியுள்ளது.

அந்த வகையில் மட்டக்களப்பு புறநகர் பகுதியில் 56.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 12.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 5.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைல ம்பாவெளிப் பகுதியில் 34.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடாப் பகுதியில் 76.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 4.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 75.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகரைக்கட்டு முறிவு பகுதியில் 19.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 12.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி கே.சூரியக்குரான் நேற்று காலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இப்பருவ மழை உரிய காலத்தில் பெய்யாததால் விவசாயிகள் பாதிப்பையே எதிர்கொண்டுள்ளனர். தற்போது பெய்த மழையினால் வரட்சியிலிருந்து மீதியாக தப்பிப் பிழைத்திருக்கும் விவசாய நிலங்களுக்கு உயிர் கொடுத்தாற் போல் அமைந்துள்ளது என்பது உண்மை. இருப்பினும் இவ்வாறான மழை தொடர்ந்தும் தேவையென விவசாயிகள் எதிர்பார்த்திருக்கின்றனர்.