இலங்கையிலும் உலகத்திலும் உள்ள தலைவர்களில் வீரமும் தீரமும் மிக்க முதன்மையான தலைவராக பிரபாகரன் விளங்குகிறார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அழிவுக்குள்ளான கடை உரிமையாளர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கபட்ட 74 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்கும் நிகழ்வு இன்று அரச செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இணைத்தலைவரும் யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மு.சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர் விஜயகலா,
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரோடு இணைந்து நல்லாட்சி பயணம் ஒன்றை மேற்கொண்டு இருக்கின்றனர்.
வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வியலை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம். நாங்கள் தேர்தல் வாக்குகளை நோக்கி இவற்றை செய்யவில்லை. இந்த நட்டஈட்டை நாங்கள் பெற்றுத்தருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டோம்.
சில துரோகிகள் எங்களை துரோகிகள் என்கிறார்கள். கடந்த ராஜபக்ச காலத்தில் இங்கு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.
நேர்மையாக செயற்பட்ட கிராம சேவையாளர்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆதாரவாளர் என்று கூறி வேலையில் இருந்து நீக்கினார்கள்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆதரவாளர்கள் எனக்கூறி அரசாங்கம் வழங்கிய மின்சாரங்களை சில கிராமங்களுக்கு நிறுத்தினார்கள். ஆனால் இன்று இவர்கள் தங்களை தலைவர்களாக காட்ட முயற்சிக்கின்றார்கள்.
இலங்கையிலும் உலகத்திலும் உள்ள மிகச்சிறந்த வீரம்மிக்க தலைவர் வல்வெட்டித்துறை மண் தந்த பிரபாகரனே.
நீங்கள் வாக்களிக்கும் போது உங்கள் இனம் சார்ந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள் என்று குறிப்பிட்டார்.







