எக்காரணத்தைக் கொண்டும் வலி.வடக்கில் உள்ள மயிலிட்டிப் பகுதியை இராணுவத்தினர் விட்டுக்கொடுக்க கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதியில் மக்களை மீள்குடியேற்றக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் படை அதிகாரிகளின் தேசிய போர் வீரர்கள் முன்னணி என்ற அமைப்பு இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.
குறித்த அமைப்பினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று கடந்த புதன்கிழமை இடம்பெற்ற நிலையில், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போர் வீரர்கள் முன்னணி அமைப்பின் தலைவர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள நிலையில், படுகொலை குற்றச் சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவத்தைச் சேர்ந்த ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
நாட்டில் யுத்த வெற்றியை கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளை நினைவுகூற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்தும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், புலம் பெயர் தமிழ் மக்களுக்கும், புலி செயற்பாட்டாளர்களுக்கும் இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பில் பேசப்பட்டு வரும் நிலையில், அது இலங்கைக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
எனவே, இவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் போது தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், புலம் பெயர் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டுள்ளமைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜெனிவாவின் வழிநடத்தலில், காணாமற்போனோர் செயலகத்தை உருவாக்குவது ஆபத்தானது. எனவே, அதற்கான செயல்முறைகளை தடுத்து நிறுத்தி, இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை முறியடிக்க வேண்டும் என கோரியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.







