சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு..!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையே தேவை என வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை சம்பவத்தின் தீர்ப்பு அதனை நன்கு உணர்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையின் நீதிதுறையில் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடையாது என்பதை வலியுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

நடராஜா ரவிராஜின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து குற்றம் சுமத்தப்பட்டிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட ஐவரும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் நிறைவை மிக உற்சமாக கொண்டாடவுள்ள நிலையில் சிங்கள பௌத்த பேரினவாதம் தெளிவான செய்தியை கூறியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் படுகொலை மூலம் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வு வழங்கப்படாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த கொலை தொடர்பில் எந்தவொரு குற்றவாளிகளையும் கண்டறிய அரசாங்கம் தவறியுள்ளதாகவும், சந்தேகநபர்களை விடுதலை செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.