ரஞ்சி டிராபி: அரையிறுதி போட்டிக்கு தமிழக அணி முன்னேறுமா?

ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகிறது. தமிழக அணி காலிறுதியில் பலம் வாய்ந்த கர்நாடகாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை (23-ந்தேதி) முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது.

சர்வதேச வீரர்களான அஸ்வின், முரளி விஜய் ஆகியோர் காலிறுதியில் விளையாடுவார்கள் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக இருவரும் ஆடமாட்டார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இது தமிழக அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

‘லீக்’ ஆட்டங்களில் தமிழ்நாடு சிறப்பாக விளையாடியது. 26 புள்ளிகளை பெற்று காலிறுதியில் நுழைந்தது. ரெயில்வே , பரோடா அணிகளை வென்றது. மும்பையிடம் தோற்றது. குஜராத், பஞ்சாப், பெங்கால், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் அணிகளுடன் ‘டிரா’ செய்தது.

தமிழக அணியில் கேப்டன் அபினவ் முகுந்த், கவுசிக் காந்தி, தினேஷ் கார்த்திக், பாபா அபராஜித் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

கவுசிக் காந்தி 8 ஆட்டத்தில் 709 ரன் எடுத்துள்ளார். இதில் 3 சதமும், ஒரு அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 202 ரன் குவித்துள்ளார். அபினவ் முகுந்த் 3 சதத்துடன் 672 ரன்னும், தினேஷ் கார்த்திக் ஒரு சதத்துடன் 592 ரன்னும் எடுத்துள்ளனர். பந்துவீச்சில் விக்னேஷ் (32 விக்கெட்), அஸ்வின் கிரைஸ்ட் (27 விக்கெட்) ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

கர்நாடக அணி மிகவும் பலம் பொருந்தியது என்பதால் அந்த அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவது தமிழக அணிக்கு சவாலானது.

இங்கிலாந்துக்கு எதிரான சேப்பாக்கம் டெஸ்டில் முச்சதம் அடித்த கருண்நாயர், 199 ரன் குவித்த லோகேஷ் ராகுல் ஆகிய இருவரும் கர்நாடக அணியில் விளையாடுகிறார்கள். இதுதவிர சர்வதேச போட்டியில் ஆடிய மனிஷ் பாண்டேயும் உள்ளார்.

இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. தமிழகத்தை வீழ்த்தி அரையிறுதியில் எளிதில் நுழையும் ஆர்வத்துடன் கர்நாடகா உள்ளது.

கேப்டன் வினய்குமார், ஸ்டுவர்ட் பின்னி போன்ற சிறந்த வீரர்களும் அணியில் உள்ளனர். ராபின் உத்தப்பா காலிறுதியில் விளையாடவில்லை. கர்நாடக அணி ‘லீக்’ ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டத்தில் தோற்றது. இரண்டில் ‘டிரா’ செய்தது. மொத்தம் 37 புள்ளிகளை பெற்று இருந்தது.

இரு அணிகளும் அரையிறுதியில் நுழைய கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

நாளை தொடங்கும் மற்ற காலிறுதி ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் மும்பை- ஐதராபாத் (ராய்ப்பூர்), அரியானா- ஜார்க்கண்ட் (வதோதரா), குஜராத்-ஒடிஷா (ஜெய்ப்பூர்) அணிகள் மோதுகின்றன.

தமிழ்நாடு: அபினவ் முகுந்த் (கேப்டன்), பாபா அபராஜித் (துணை கேப்டன்), தினேஷ் கார்த்திக், கவுசிக் காந்தி, பாபா இந்திரஜித், அஸ்வின் கிரைஸ்ட், அவுசிக் சீனிவாஸ், ஜெகதீசன், கவுசிக், எம்.முகமது, டி.நடராஜன், மலோலன் ரங்கராஜன், ரகீல்ஷா, சூர்ய பிரகாஷ், விக்னேஷ், ஹஷிங்டன் சுந்தர்.

கர்நாடகா: வினய்குமார் (கேப்டன்), லோகேஷ் ராகுல், கருண்நாயர், மனீஷ் பாண்டே, ஸ்டூவர்ட் பின்னி, அபிமின்யு மிதுன், அரவிந்த், சம்ரத், கவுதம், அப்பாஸ், அகர்வால், அப்ரார் கார்ஜி, அகர்வால், ஷிரோயாஸ், மத்தியாஸ், பவன் தேஷ்பாண்டே.