நாட்டில் மக்களை தூண்டுவது யார்? ஆட்டம் காணுமா அரசு??

அண்மைக்காலமாக இலங்கை அரசிற்கு பெரும் சவாலாக இருந்த ஓர் விடயமே இனவாதம். இலங்கை பௌத்தத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு அமைய இந்த சிக்கலை கையாளுவது பெரும் பிரச்சினையாகவே காணப்பட்டது.

காரணம் இனவாதப் பரப்புரைகளை மேற்கொண்டு, மக்களை தூண்டியவர்கள் பிக்குகள் என்ற காரணத்தினாலேயே.

தமிழர்களை திருப்பி வெட்ட வேண்டும், சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என கருத்து தெரிவித்தவர்களே பொதுபல சேனா ஞான சார தேரர் மற்றும் அம்பிட்டிய சுமன ரத்ண தேரர் ஆகியோர் என்பதற்கு பல ஆதாரங்கள் வெளிவந்தன.

பகிரங்க இனவாத உரையினால் சகோதர இன மக்களிடையே வெறியை தூண்டியவாறு செயற்பட்ட இவர்கள் இப்போது பரம சாந்தர்களாக மாறிவிட்டனர்.

புத்த பகவான் மற்றும் பௌத்த கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் கருத்து தெரிவித்த இவர்கள் இப்போது இந்த பிரச்சினையை அப்படியே திசை திரும்பும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் மட்டக்களப்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் சுமன ரத்ண தேரர் கருத்து தெரிவிக்கும் போது,

எனது தாய் தந்தையரைப் போல் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் அன்புடனே வாழ்ந்து வருகின்றேன். கடந்த சில நாட்களாக நான் இனவாதியாகி விட்டேன் அமைச்சர்களின் பேச்சைக் கேட்டு ஆடுகின்றேன் என்ற தவறான எண்ணம் பரப்பப்பட்டு விட்டன.

இங்கு எந்த விதமான அரசியலும் இல்லை இனவாதமும் இல்லை, அதனை விஜயதாச அமைச்சருக்கு சற்று முன்னர் தெளிவு படுத்தியுள்ளோம்.

நாம் பௌத்தத்திற்காக மட்டுமே எழுப்பிய குரலை அரசியல் இலாபங்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே இனவாதமாக மாற்றி விட்டு. தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களிடையே இனவாதத்தை தூண்டி விட்டுள்ளனர். அவர்களாலேயே நாட்டின் இளைஞர்கள் மனது மாற்றமடைந்தது.

அதன் காரணமாகவே இப்போது பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தயவு செய்து இனவாதத்தை பரப்ப வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் எனது சமூக நோக்கான சிந்தையை மாற்றி விட்டார்கள். அண்மையில் பொதுபல சேனாவினர் மட்டக்களப்பிற்கு வந்த போது வீதியை மறைத்து தமிழ் சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இனக்கலவரத்தை தூண்டும் வகையில் செயற்பட்டவர் யார்?

அதற்கு உத்தரவு இட்ட அமைச்சர் யார்? என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் யார்? அதனை செயற்படுத்தியது ஜனாதிபதியா? பிரதமரா? அல்லது பொலிஸ்மா அதிபரா என்பது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

இது தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் இல்லையென்றால் மூன்று இன இளைஞர்களிடம் இப்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தவிர்க்க முடியாது.

இது தொடர்பில் நீதித்துறை அமைச்சர் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என சுமனரத்ண தேரர் தெரிவித்தார்.

இவை நேற்று தெரிவித்த வார்த்தைகள் ஆனால் இதற்கு முன்னர் தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் என்று தெரிவித்த இதே நபரே இப்போது மாற்றி பேசியுள்ளார்.

அதேபோல இவரின் மூலமாகவே நாட்டில் சகல இடங்களிலும் பிரச்சினைகள் ஏற்பட்டன என்பது வெளிப்படையான உண்மையாகும் ஆனால் இப்போது அதனை அப்படியே அரசியலாக மாற்றியுள்ளார் எனவும் தென்னிலங்கை புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பிரச்சினைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜனாதிபதியும் பிரதமருமே காரணம் என்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளமை இவரது அரசியல் காய் நகர்த்தலை தெளிவாக காட்டுவதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் இப்போது இனவாத அரசியலாக மாறி அது அரசு பக்கமே திசை திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பின்னணி மக்கள் ஜனாதிபதி பிரதமர் மற்றும் அரசுக்கு எதிராக திசை திரும்ப வேண்டும் என்பதே.

இதனை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் போராட்டங்களின் பாதை மற்றும் இனவாதத்தின் பாதை வேரு வகையில் திசை திரும்பி அரசினையே ஆட்டம் காணவைக்கும் பிரச்சினையாக மாறிவிடும் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவரது இந்த கருத்து வெளியீட்டுக்கு முன்னர் புத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் விஷேட பேச்சுவார்த்தையில் குறித்த பிக்கு மற்றும் பொது பல சேனாவினர் ஈடுபட்டனர் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.