சிறைச்சாலைக்கு உணவுக்குள் கஞ்சா : வசமாக மாட்டினார் பெண்!

கஞ்சா அடங்கிய உணவு பொதியை யாழ் சிறைச்சாலைக்குள் எடுத்து சென்ற பெண்ணை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதுடன் கைதுசெய்த பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அல்லைப்பிட்டி, வெண்புரவி பகுதியினை சேர்ந்த குறித்த பெண் அப்பகுதியிலிருந்து யாழிலுள்ள தனது மகளைப் பார்ப்பதற்கு பஸ்ஸில் வந்துள்ளார்.

இதன் போது அப்பெண்ணிற்கு பஸ்ஸில் அறிமுகமான நபர் ஒருவர், உணவுப் பொதி ஒன்றை வழங்கி சிறைச்சாலையிலுள்ள தனது நண்பரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த உணவு பொதியை யாழ் சிறைச்சாலைக்கு எடுத்து வந்த நிலையில் அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழமையாக சிறைச்சாலையினுள் செல்லும் முன் மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் போது குறித்த பெண் கொண்டு வந்த உணவு பொதியில் கஞ்சா இருந்தமை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அத்துடன் இப்பெண்ணிற்கு உணவு பொதியினை வழங்கிய நபர் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் உணவு பொதியில் இருந்து 50 கிராம் கஞ்சா பொதி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.