பிரெஞ்ச் ஓபன் இரட்டையர் பட்டத்தை வெல்ல விரும்புகிறேன்: சானியா மிர்சா பேட்டி!

அடுத்த ஆண்டில் பிரெஞ்ச் ஓபன் இரட்டையர் பட்டத்தை வென்று கிராண்ட்ஸ்லாம் வாழ்க்கையை முழுமை செய்ய விரும்புவதாக சானியா மிர்சா கூறியுள்ளார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை 30 வயதான சானியா மிர்சா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்திருக்கிறேன். இந்த ஆண்டில் ஒரு கிராண்ட்ஸ்லாம் (ஆஸ்திரேலிய ஓபன்) உள்பட 8 இரட்டையர் பட்டங்களை கைப்பற்றினேன். அந்த வகையில் இந்த ஆண்டு எனக்கு நம்ப முடியாத, வியப்புக்குரிய வகையில் அமைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் ஆண்டின் இறுதியில் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்திருப்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

அடுத்த ஆண்டில் (2017) மேலும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல விரும்புகிறேன். குறிப்பாக நான் இதுவரை வெல்லாத பிரெஞ்ச் ஓபன் (பெண்கள் இரட்டையர்) பட்டத்தை வசப்படுத்தி விட்டால், அது அற்புதமான தருணமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்தது ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று வருகிறேன். உண்மையில் அதைத் தான் எனது இலக்காக பின்பற்றுகிறேன்.

இப்போதைக்கு எனது ஜோடியை மாற்றும் எண்ணம் எதுவும் இல்லை. நானும் செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவாவும் இணைந்து 6 போட்டிகளில் விளையாடி உள்ளோம். அதில் இரண்டு தொடர்களில் சாம்பியன் கோப்பையை வென்றோம். ஒன்றில் இறுதிசுற்று வரை முன்னேறி இருந்தோம். உண்மையிலேயே நாங்கள் சிறப்பாக தொடங்கி இருக்கிறோம். அவர் தரமான ஒரு வீராங்கனை. களத்தில் கடுமையாக போராடக்கூடியவர். இருவரும் ஏற்கனவே ஜூனியர் போட்டியில் இணைந்து விளையாடி உள்ளோம்.

சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிசுடன் கைகோர்த்து விளையாடிய போது, அனுபவசாலியான அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். களத்திலும், வெளியிலும் எங்களிடையே புரிந்துணர்வு சிறப்பாக இருந்தது. நிறைய வெற்றிகளை குவித்தோம். எங்களை போல் சாதித்தவர்கள் அதிகம் கிடையாது. நம்முடன் வெற்றிகரமான பங்களிப்பை அளித்த ஒருவரை பிரிவது என்பது மிகவும் சங்கடமான விஷயம் தான். ஆனால் ஒவ்வொருவரும் தொடர்ந்து வெற்றிகளை குவிக்கவே ஆசைப்படுகிறோம். அது கைகூடாத பட்சத்தில், அதை நோக்கி நகர வேண்டியது இருக்கிறது.

இபபோதைக்கு கலப்பு இரட்டையர் பிரிவில் குரோஷியாவின் இவான் டோடிக்குடன் ஜோடி சேர்ந்து விளையாடுகிறேன். கடந்த 4-5 மாதங்களாக அவர் கொஞ்சம் முதுகுவலியால் அவதிப்படுகிறார். அவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் கவனம் செலுத்துகிறார். ஆஸ்திரேலியாவில் பயிற்சி மேற்கொண்ட பிறகு இணைந்து விளையாடுவது குறித்து சொல்வதாக என்னிடம் கூறியிருக்கிறார். ஒரு வேளை 100 சதவீதம் உடல்தகுதியுடன் இல்லை என்று அவர் உணர்ந்தால், அதன் பிறகு நான் வேறு ஜோடியை தேர்வு செய்வேன்.

இவ்வாறு சானியா கூறினார்.