பாய்காட்டின் கனவு அணியில் ஒரு இந்தியருக்குக் கூட இடமில்லை!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் ஜெஃப்ரி பாய்காட். இவர் தற்போது தொலைக்காட்சி வர்ணனையாளாக உள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அவர் வர்ணனையாளராக செயலாற்றி வருகிறார்.

இவர் தனது 11 பேர் கொண்ட கனவு அணியை தற்போது அறிவித்துள்ளார். இதில் ஒரு இந்தியருக்குக் கூட இடமில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கபில்தேவ் மிகவும் சிறந்த பந்து வீச்சாளர். அதேபோல் இயான் போத்தமும் சிறந்த வீரர்தான். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேரி சோபர்சை விட இவர்களை சிறந்த வீரராக என்னால் தேர்வு செய்ய முடியவில்லை.

அந்த அணியில் எனக்குக் கூட இடமில்லை. கவாஸ்கர் சிறந்த வீரராக இருந்தாலும், கிரேஸ் மற்றும் ஹோப்ஸ் ஆகியோரை விட இவரை எப்படி தேர்வு செய்ய முடியும். கிரேஸ் 30 ரன்களையொட்டிதான் சராசரி வைத்திருப்பார். ஆனால், தற்போது சிறந்த வகையில் தயார் செய்யப்படும் ஆடுகளத்தை அப்போதைய காலக்கட்ட ஆடுகளத்துடன் ஒப்பிடக்கூடாது. அப்போது ஆடுகளம் முழுவதும் கற்களாக காணப்படும். ஆடுகளம் காயும் வரை மதியம் இரண்டு மணி வரை காத்திருப்பார்கள். தற்போது ஈரப்பதமான ஆடுகளத்தை கொடுத்தால், வீரர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும்’’ என்றார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானை கேப்டனாக தேர்வு செய்துள்ள பாய்காட், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜார்ஜ் ஹெட்லி, விவியன் ரிச்சர்ட்ஸ், கார்பீல்டு சோபர்ஸ் இங்கிலாந்தின் ஜேக் ஹோப்ஸ், கிரேஸ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.