நீண்ட நாள் காதலியை அடுத்த ஆண்டு மணக்கிறார் மெஸ்சி!

அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணியின் முன்னணி வீரராகவும் திகழ்ந்து வருகிறார். உலகின் சிறந்த வீரரான இவர், திருமணம் முடிக்காமல் தனது நீண்ட நாள் காதலியான அன்டோனெல்லா ரொக்குஸ்சோ என்பவருடன் வாழ்ந்து வருகிறார். 2010ம் ஆண்டு முதல் இணைபிரியாமல் வாழ்ந்து வரும் இவர்களுக்கு தியாகோ, மேடியோ என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.


இந்நிலையில், தன்னுடன் வாழ்ந்து வரும் காதலி அன்டோனெல்லாவை ஆண்டு முறைப்படி திருமணம் செய்துகொள்ள மெஸ்சி முடிவு செய்து உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு மத்தியில் திருமணம் நடைபெறும் என அவரது உறவினர் ஒருவரும் ரேடியோ நிகழ்ச்சியில் உறுதி செய்துள்ளார்.

மெஸ்சி-அன்டோனெல்லா திருமணம் அர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியோ நகரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறு வயதில் இவர்கள் இருவரும் இந்த நகரில்தான் முதல் முறையாக சந்தித்து அறிமுகமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அநேகமாக மெஸ்சியின் பிறந்தநாளான ஜூன் 24-ம் தேதி திருமணம் நடைபெறலாம் என தெரிகிறது. இந்த திருமண விழாவில் பங்கேற்க அர்ஜென்டினா, பார்சிலோனா அணி வீரர்கள் மற்றும் மெஸ்சியுடன் இணைந்து விளையாடிய முன்னாள் வீரர்கள், நண்பர்கள் என பலர் அழைக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


ரொசாரியோவில் உள்ள தேவாலயத்தில் திருமணமும், மெஸ்சியின் குடும்ப வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும் எனத் தெரிகிறது.