11 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்து இங்கிலாந்து கேப்டன் குக் சாதனை!

இங்கிலாந்து அணியின் கேப்டன் அலஸ்டைர் குக் இடது கை பேட்ஸ்மேன் ஆவார். 31 வயதான இவர், இன்னும் சில தினங்களில் (டிச.25) 32 வயதை எட்டிப்பிடிக்க உள்ளார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார். அப்போது அவருக்கு 20 வயது.

தனது சிறப்பான ஆட்டத்தால் டெஸ்ட் போட்டியில் ரன்களை குவித்து வந்தார். இன்று சென்னையில் தொடங்கிய டெஸ்ட் போட்டிக்கு முன்புவரை குக் 139 டெஸ்டில் 10998 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 30 சதங்களும், 53 அரை சதங்களும் அடங்கும்.

இன்னும் 2 ரன்கள் எடுத்தால் ‘டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்’ என்ற மைல்கல்லை எட்டும் நோக்கில் இன்று களம் இறங்கினார். ஆட்டத்தின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து இந்த சாதனையைப் படைத்தார்.

இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களைக் கடந்த 10-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் விரைவாக 11 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இவர் 10 வருடம் 290 நாட்களில் 252 இன்னிங்ஸ் மூலம் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார்.

இலங்கை வீரர் சங்ககரா 13 வருடம் 199 நாட்களில் 208 இன்னிங்சிஸ் மூலம் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார். சச்சின் தெண்டுல்கர் 17 வருடம் 254 நாட்களில் 223 இன்னிங்சிலும், பிரைன் லாரா 14 வருடம் 354 நாட்களில் 213 இன்னிங்சிலும், ரிக்கி பாண்டிங் 13 வருடம் 212 நாட்களில் 222 இன்னிங்சிலும், ராகுல் டிராவிட் 13 வருடம் 149 நாட்களில் 234 இன்னிங்சிலும், கல்லிஸ் 14 வருடம் 186 நாட்களில் 234 இன்னிங்சிலும், ஜெயவர்தனே 16 வருடம் 167 நாட்களில் 237 இன்னிங்சிலும், ஆலன் பார்டர் 15 வருடம் 30 நாட்களில் 259 இன்னிங்சிலும் 11 ஆயிரம் ரன்களை தாண்டியுள்ளனர்.