ஐதராபாத்தில் உறவுப்பெண் பெயரில் ஜெயலலிதா உயில் எழுதியதாக தகவல்

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு யார் வாரிசு என்ற எதிர் பார்ப்பு நாடு முழுவதும் நிலவிவருகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் உயில் ஐதராபாத் மேச்சல் என்ற பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த உயில் 2000-ம் ஆண்டு ஜூலை 14-ந்தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஐதராபாத் புறநகர் பகுதியான பேட்பஷிராபாக பகுதியில் ஜெ.ஜெ.கார்டன் உள்ளது. இந்த முகவரியில் உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்தெந்ந சொத்துக்கள் இந்த உயிலில் இடம் பெற்றுள்ளன என்ற விவரம் கூறப்படவில்லை. ஜெயலலிதா தனது ரத்த சொந்தத்தில் உள்ள உறவுப்பெண் ஒருவரின் பெயரில் இந்த உயிலை எழுதி வைத்திருப்பதாக சார்பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவரது பெயரையும் சார் பதிவாளர் அலுவலகம் வெளியிடவில்லை.

சம்பந்தப்பட்ட பெண் நேரில் வந்து தனது பெயரை ஆதாரப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே அவரிடம் இந்த உயில் ஒப்படைக்கப்படும் என்று சார்பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு கோர்ட்டில் நடந்த போது ஜெயலலிதா எழுதி வைத்திருந்த உயிலுடன் சார் பதிவாளர் பலமுறை சி.பி.ஐ. நீதிமன்றத்திலும் ஆஜராகியுள்ளார்.

1965-ம் ஆண்டுக்கு முன்பு பல தெலுங்கு படங்களில் ஜெயலலிதா நடித்தார். அப்போது ஐதராபாத் பேட்பஷிராபாத் பகுதியில் ஜி.டி.மெட்லா, ஹோம்பள்ளி ஆகிய இடங்களில் 4 ஏக்கர், 7 ஏக்கர் பரப்பளவில் தோட்டம் வாங்கினார், இந்த தோட்டத்துக்கு ஜெ.ஜெ. கார்டன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தை சுற்றி காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் ஒரு விருந்தினர் இல்லமும் உள்ளது.

ஆரம்பத்தில் இந்த தோட்டத்தில் காவலாளி கிருஷ்ணன் என்பவர் விவசாயம் செய்து வந்தார். அப்போது அங்கு வாழை, மா, நெல் போன்றவற்றை பயிரிட்டார்.

தற்போது இந்த தோட்டத்தில் ராமகிருஷ்ண ராஜூ என்பவர் காய்கறி மற்றும் எலுமிச்சை போன்றவற்றை விளைவித்து வருகிறார். இதற்காக குத்தகை போல ஆண்டுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 25 ஆயிரம் கொடுத்து வந்தார்.

இந்த தோட்டத்தில்உள்ள விருந்தினர் இல்லத்தை தமிழகத்தை சேர்ந்த குடும்பத்தினர் பராமரித்து வருகிறார்கள். ஆரம்பகாலத்தில் வருடத்துக்கு ஒரு முறை ஜெயலலிதா இந்த தோட்டத்துக்கு சென்று பார்ப்பதுண்டு. அப்போது பேட்பஷிராபாத்தில் உள்ள சிவன் கோவிலுக்கும் அவர் சென்று தரிசனம் செய்வார். கடைசியாக அவர் 2007-ம் ஆண்டு ஜெ.ஜெ. கார்டனுக்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் வரவில்லை.

இதே போல தெலுங்கு படங்களில் நடித்த போது ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் ஒரு வீட்டையும் ஜெயலலிதா வாங்கியுள்ளார். சினிமாவில் நடித்த போது அவர் இந்த வீட்டுக்கும் வந்து தங்குவதுண்டு. அரசியலில் நுழைந்த பிறகு அவர் இங்கு வரவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டை ஒரு தனியார் நிறுவனத்துக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.