சீரடி சாய்பாபா நடந்திய மத நல்லிணக்க விழா

சீரடி சாய்பாபா அனைத்து மதங்களுக்கும் மேலானவர். அவரை எந்த ஒரு மதத்துக்குள்ளும் அடக்கி விட முடியாது.

சன்னியாசி போன்று வாழ்ந்த அவர் அனைத்து மதங்களின் கோட்பாடுகளையும் தனது தினசரி வாழ்க்கை நடைமுறையில் கடைபிடித்தார். எந்த மதத்தையும் அவர் ஆதரிக்கவில்லை. எந்த ஒரு மதத்தையும் அவர் வெறுக்கவும் இல்லை.

ஒட்டு மொத்த மக்களையும் நல்ல வழியில் நடத்தி, அவர்களை காப்பதற்காக, தன்னை ஒரு தூதுவராகக் கடவுள் அனுப்பி வைத்து இருப்பதாக சாய்பாபா அடிக்கடி சொல்வார். அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் ஒவ்வொரு விஷயத்திலும் சம நோக்குடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொண்டார்.
“அனைத்து ஜீவராசிக்குள்ளும் கடவுள் இருக்கிறார்” என்பதை பாபா அழுத்தம் திருத்தமாக சொன்னார். அதனால்தான் அவரால் அனைத்து மதங்களுக்கும் தேவையான மரியாதையைத் தர முடிந்தது.

இஸ்லாமியர்கள் வந்தால் அவர்களுடன் குர்ஆனில் கூறப்பட்டு இருப்பது பற்றி பேசுவார். விவாதிப்பார். அது போல இந்துக்கள் வந்தால் அவர்களுக்கு ராம மந்திரத்தைப் போதிப்பார்.

ஒரு தடவை இயேசுநாதர் பற்றி தரக்குறைவாகப் பேசிய பக்தரை கடும் கோபத்துடன் கண்டித்தார். அவரை மன்னிப்புக் கேட்க வைத்தார். இப்படி எந்த மதத்துக்குள்ளும் தன்னை அடைத்துக் கொள்ளாததால்தான் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் சாய்பாபாவை மனதார கடவுளாக ஏற்றுப் பூஜித்துப் போற்றினார்கள்.

பாபா எப்போதுமே, தான் கடைபிடிக்கும் வாழ்வியல் நடைமுறைகளை தனது பக்தர்களும் உளமாற கடைபிடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அதன் காரணமாகத்தான் அவரால் சீரடி தலத்தில் முஸ்லிம்களின் விருப்பப் பண்டிகையான சந்தனக்கூடு திருவிழாவையும், இந்துக்களின் பண்டிகையான ராமநவமியையும் ஒரே நாளில் சீரும் சிறப்புமாக நடத்த முடிந்தது.

மத நல்லிணக்க விழாவாக அந்த விழாக்களை ஒருங்கிணைத்து நடத்தினார். அதன் பின்னணியில் ஒரு வரலாறு இருப்பதாக ஸ்ரீசாயி சத்சரிதம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாய் பக்தர்கள் ஒவ்வொருவரும் அதை தெரிந்து கொள்ள வேண்டும்.

சீரடி அருகில் உள்ள கோபர்கானில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் கோபால்ராவ் குண்ட். இவர் பாபாவின் அதி தீவிர பக்தர். மூன்று பெண்களைத் திருமணம் செய்தும் கோபால்ராவ் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தார். 1897ம் ஆண்டு ஒரு தடவை பாபா வழங்கிய அருளாசியால் அவருக்கு குழந்தை பிறந்தது.

இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த கோபால்ராவ், தனது நன்றியை வெளிப்படுத்தும் வகையில் பாபா பெயரில் உருஸ் எனும் திருவிழா நடத்த விரும்பினார். தாத்யா பாட்டீல், சாமா ஆகியோர் மூலம் பாபாவிடம் பேசி அவர் உருஸ் விழா நடத்துவதற்கான அனுமதியை பெற்றார்.

உருஸ் திருவிழாவுக்கு நிறைய பக்தர்கள் சீரடியில் திரள்வார்கள் என்பதால் மாவட்ட கலெக்டரின் அனுமதியைப் பெற வேண்டியதிருந்தது. சீரடி கிராம அதிகாரியின் இடையூறுகளை சமாளித்து கலெக்டரிடம் இருந்து அனுமதி பெறப்பட்டது.

அடுத்து எந்த தினத்தில் உருஸ் விழாவை நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. அதையும் சாய்பாபாவிடமே கேட்டனர். உடனே பாபா கொஞ்சமும் தயக்கமின்றி ராமநவமி தினத்தன்று உருஸ் திருவிழாவை நடத்துமாறு உத்தரவிட்டார். அதை ஏற்று அனைவரும் உருஸ் திருவிழாவுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில் சீரடியில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவியது. இதை அறிந்த பாபா சீரடியில் இருந்த உப்புத் தண்ணீர் கிணற்றில் பூக்களை அள்ளிப் போட்டு, அந்த கிணற்றில் நல்ல தண்ணீர் வரவழைத்தார். உருஸ் திருவிழாவை முன்னிட்டு சீரடி விழாக்கோலம் பூண்டது. ஆங்காங்கே பாபாவுக்கு மிகவும் பிடித்த மல்யுத்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.

திருவிழாவில் சாய்பாபாவின் பக்தர்கள் இரு கொடிகளை ஏந்தி ஊர்வலமாக கொண்டு சென்றனர். அந்த ஊர்வலம் துவாரகமாயி மசூதியை அடைந்தது. மசூதியின் இரு பக்கத்தில் இரு கொடிகளும் ஊன்றப்பட்டன. இந்த விழா நடைமுறை இப்போதும் கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் சீரடியில் ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி தினத்தன்று உருஸ் திருவிழா சீரும் சிறப்புமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு தடவை, துவாரகமாயி மசூதிக்கு அமீர்சக்கர்தலால் எனும் முஸ்லிம் பக்தர் வந்தார். அவர் சீரடியில் “சந்தனகூடு ஊர்வலம்” நடத்த விரும்பினார். இதற்காக அவர் பாபாவிடம் அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சந்தனக்கூடு ஊர்வலம் என்பது முஸ்லிம்களின் திருவிழா சடங்காகும்.

சந்தனக்கூடு ஊர்வலம் நடத்த சாய்பாபா எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. உடனடியாக ஒத்துக் கொண்டார். இதனால் இஸ்லாமிய பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சந்தனக்கூடு ஊர்வலத்தை எப்போது நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விடை காண பாபா உதவியை நாடினார்கள்.

பாபா கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. உருஸ் திருவிழா நடத்தப்படும் ராம நவமி தினத்தன்று சந்தனக்கூடு ஊர்வலத்தையும் நடத்தும்படி கூறினார். முஸ்லிம் அன்பர்கள் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.

1900களில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. தட்டுகளில் சந்தனப் பொடியையும், சந்தனக் குழம்பையும் எடுத்துச் சென்றனர். மேள-தாளம் முழங்க சந்தனக்கூடு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தின் முன்பு ஒருவர் சாம்பிராணி போன்ற நறுமணப் பொருட்களின் புகை போட்டபடி சென்றார். அந்த ஊர்வலம் துவாரகமாயி மசூதியை அடைந்ததும் தட்டுகளில் எடுத்து வரப்பட்ட சந்தனக்குழம்புகள் மசூதியின் சுவர்களில் பூசப்பட்டன.

மீதமான சந்தனக்குழம்பும், சந்தனப் பொடியும் “நிம்பா” எனும் குழிகளில் கொட்டப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு சந்தனக்கூடு ஊர்வலம் மிகுந்த எழுச்சியை பெற்றது. ராமநவமி தினத்தன்று இந்துக்கள் கொடி ஏந்தியபடி சென்று பாபாவின் உருஸ் திருவிழாவையும், முஸ்லிம்கள் சந்தனம் ஏந்தி சென்று சந்தனக்கூடு விழாவையும் நடத்தினார்கள். இது சீரடியில் மத நல்லிணக்கத்துக்கு வித்திட்டது.

இந்த நிலையில் 1912-ம் ஆண்டு உருஸ்-சந்தனக்கூடு விழாவில் புதிய சேர்க்கை ஒன்று நிகழ்ந்தது. உருஸ் விழாவுக்கு வந்திருந்த “சாயி சகுணோபாசனா” எனும் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணராவ் ஜாகேச்வர் பீஷ்மா, உருஸ் தினத்தன்று ராமநவமி பண்டிகையையும் கொண்டாடினால் என்ன என்று மற்றவர்களுடன் விவாதித்தார். பாபாவின் தீவிர பக்தர்களில் ஒருவரான காகா மாஜினியும் ராமநவமி தினத்தை கொண்டாடலாம் என்றார்.

ராமநவமி திருவிழாவைக் கொண்டாட வேண்டுமானால், ராமர் பிறந்த கதை பற்றி தொடர்புடைய கீர்த்தனைகள் பாட வேண்டும். பிரசாதம் வழங்க வேண்டும்.

இவை அனைத்துக்கும் மளமளவென ஏற்பாடுகள் நடந்தன. சாய்பாபாவின் அனுமதி பெறாமலேயே இந்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. அண்டமெல்லாம் நிறைந்துள்ள பாபாவுக்கு இது தெரியாமல் போய் விடுமா என்ன? பக்தர்களை அழைத்த அவர், “ஏதோ ஏற்பாடுகள் நடக்கிறதே, என்ன விசேஷம்?” என்று கேட்டார்.

கிருஷ்ணராவ் பீஷ்மா பயந்து, மிகவும் தயங்கியபடி உருஸ் திருவிழாவின் போது ராமநவமியையும் கொண்டாட ஏற்பாடு செய்து வருவதாக கூறினார். அதைக் கேட்டதும் பாபா சிரித்தபடி, “நல்லது… நல்லது சிறப்பாக ஏற்பாடு செய்யுங்கள். எல்லா நிகழ்ச்சிகளும் சிறப்பாக இருக்க வேண்டும்” என்றார்.

அவர் கொடுத்த இந்த அனுமதி பாபாவின் ஆசி போல இருந்தது. இந்து பக்தர்கள் ராமநவமி விழா ஏற்பாடுகளை செய்தனர். அந்த ஆண்டு உருஸ் திருவிழா, ராமநவமி விழாவாகவும், சந்தனக்கூடு விழாவாகவும் களை கட்டியது. பாபாவுக்கு மாலை அணிவித்து கொண்டாடினார்கள்.

1913-ம் ஆண்டு முதல் ராமநவமி திருவிழா 7 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் திருவிழாவாக மாறியது. 7 நாட்களும் “ராமரின்” கீர்த்தனைகள் பாடப்பட்டன.
பாபாவின் அருளால் சீரடியில் நடக்கும் இந்த விழாக்களில் முதலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். தற்போது லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்கிறார்கள்.

உருஸ்-ராமநவமி-சந்தனக்கூடு விழாக்களில் பாபா பயன்படுத்த அழகான குதிரைகள், வெள்ளி ரதம், பல்லக்கு போன்றவை பாபாவுக்கு பணக்கார பக்தர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே அவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும்.

ஆனால் எந்த ஆடம்பர, அலங்கார பொருளும் சாய்பாபா மனதை மாற்றவில்லை. அவரது நடவடிக்கைகளையும் மாற்றி விடவில்லை. அவர் ஏதும் இல்லாத சன்னியாசி போலவே சீரடி மசூதியில் வாழ்ந்தார்.

ராமநவமி நாட்களில் சாய்பாபாவுக்கு அழகு நிறைந்த பட்டுச்சட்டைகள், சால்வைகள் அணிவிக்கும் ஒரு புதிய பழக்கம் தோன்றியது. சாய்பாபாவை சீரடி சமஸ்தானத்தின் மகாராஜாவாக கருதி பக்தர்கள் இந்த அன்பளிப்புகளை வழங்கினார்கள். “சாய் மகராஜிக்கு ஜே” என்று முழங்கினார்கள்.

ஆனால் எந்த வாழ்த்து கோஷத்தையும் கேட்டு பாபா மயங்கி விடவில்லை. அது போல பட்டு சட்டைகள், சால்வைகளை பாபா ஒரு போதும் நிரந்தரமாக அணிந்து கொண்டதே இல்லை. எந்த பக்தர் அந்த பட்டுச்சட்டையை வாங்கி வந்தாரோ அவரிடமே திருப்பிக் கொடுத்து விடுவார்.

அவர் எளிமை ஒரு போதும் மாறவே இல்லை. இதன் காரணமாக வழக்கம் போல பாபா இந்துவா அல்லது முஸ்லிமா என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழும். அதற்கு ஒரு போதும் அவர்களுக்கு விடை கிடைக்கவே இல்லை.

இப்படி பக்கிரி போல வாழ்ந்து வந்த பாபாவிடம் யாராவது தற்பெருமையுடன் தலைக்கனத்துடன் நெருங்க முடியுமா?

அத்தகைய நபர்களை பாபா தன்னிடம் நெருங்க விட்டதே இல்லை. இதை உணர்த்தும் ஒரு சம்பவத்தை அடுத்த வாரம் வியாழக்கிழமை காணலாம்.