சந்தி சந்தியாக நின்று பேசித் திரியாமல் என்னுடன் விவாதத்துக்கு வாருங்கள்! – மஹிந்தவுக்கு நிதி அமைச்சர் பகிரங்க அழைப்பு

2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பற்றி சந்தி சந்தியாகப் போய் நின்று பொய்ப் பிரசாரம் செய்யாமல் அது பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக நேரடி விவாதத்துக்கு வருமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “மக்கள் நேய வரவு – செலவுத் திட்டம் ஒன்றை நாம் சமர்ப்பித்துள்ளோம். அதில் மக்களுக்கு அதிக நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் குறைகூற முடியாது.

ஆனால், எதிர்க்கட்சிகள் எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே அதை எதிர்க்கின்றன.முன்னாள் ஜனாதிபதியான – முன்னாள் நிதி அமைச்சரான மஹிந்த ராஜபக்ஷவால் அவரது காலத்தில் 10 ரூபாவைக்கூட நிவாரணமாக வழங்க முடியவில்லை.

ஆனால், நாம் அதிக நிவாரணங்களை வழங்கியுள்ளதால் பொறாமையால் அவர் இந்த வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் பொய் கூறித் திரிகின்றார்.

இது தொடர்பில் விவாதிப்பதற்கு நாம் அவரை அழைக்கின்றோம். அவர் எங்குஅழைத்தாலும் நான் வருவதற்குத் தயார். அம்பாந்தோட்டைக்கு வேண்டுமென்றாலும்வருகின்றேன்.

வாருங்கள் விவாதிப்போம். சும்மா சந்திகளில் நின்று பொய்கூற வேண்டாம். குறைந்தது நாடாளுமன்றிற்காவது விவாதத்துக்கு வாருங்கள். அதிலுள்ள குறைபாடுகளை நேருக்கு நேரே சுட்டிக்காட்டுங்கள். அதற்கான பதிலை நான் அப்போது வழங்குவேன்.

அப்போதுதான் மக்கள் உண்மை நிலையை விளங்கிக்கொள்வார்கள். அப்படி இல்லாது இப்படி ஒளிந்து ஒளிந்து குறை கூறித் திரிவதில் அர்த்தமில்லை.

மஹிந்த கூறித் திரிகின்ற அத்தனை விடயங்களும் பொய்யாகும். அது பொய் என்பதை நாம் நிரூபித்து வருகின்றோம். இது தொடர்பில் நேரடி விவாதத்துக்கு வந்தால் மக்கள்உண்மையை விளங்கிக்கொள்வார்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்.