ரூ.401 கோடி இழப்பீடு தரும் டிரம்ப்: யாருக்கு தெரியுமா?

டிரம்ப் பல்கலைக்கழக மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.401 கோடி இழப்பீடு தருவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு மோசடி வழக்குகள் வரிசையில் உள்ளன. இதையே தேர்தலின் போது அவருக்கு எதிராக பேசப்பட்டது. ஆனாலும் அதை எல்லாம் மீறி தற்போது அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார்.

டிரம்ப் தன்னுடைய சொந்த பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை நடத்தி வந்தார். இதில் தேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தப்படும் என்றும் அதுமட்டுமில்லாமல் டிரம்ப் கொடி கட்டிப்பறந்து வந்த ரியல் எஸ்டேட் தொழிலின் ரகசியங்கள் கற்றுத்தரப்படும் என கவர்ச்சியான வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.

இதன் காரணமாக பல்வேறு மாணவர்களும் அப்பல்கழைக்கழகத்தில் சேர்வதற்கு போட்டி போட்டுக் கொண்டு முந்தினர். அதில் மாணவர் ஒருவருக்கு சுமார் 35 ஆயிரம் டொலர் பெறப்பட்டது.

ஆனால் நிர்வாகமோ வாக்குறுதி கொடுத்தது போல் பாடத்திட்டங்களை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக சுமார் 6000 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு பல்கழைக்கழகம் மூடப்பட்டது. வழக்கை விசாரித்த நியூயார்க் நிதிமன்றமோ இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சனைக்கு தீர்வு காண அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் டிரம்ப் திடீரென்று பல்கலைக்கழக மோசடி வழக்கில் பல்டி அடித்துள்ளார். அவர் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25 மில்லியன் டாலர் (இலங்கை மதிப்பு 401 கோடி) தீர்வுத்தொகையை இழப்பீடாக தந்து வழக்கை முடிவுக்கு கொண்டு வர ஒப்புக்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து நியூயார்க் அட்டார்னி கூறுகையில், டிரம்பின் இந்த முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மாணவர்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றும் மாணவர்கள் பல்லாண்டு காலம் பொறுமையுடன் காத்திருந்தற்கு கிடைத்த பரிசு எனவும் கூறியுள்ளார்.

மேலும் 27 மில்லியன் டொலர் இழப்பீடு தருவேன் என டிரம்ப் கூறியிருப்பது அதிகம் என்றாலும், ஜனாதிபதியாக உள்ள காரணத்தினால் இது தொடர்பான வழக்கை நீதிமன்றத்தில் மேற்கொள்ள வேண்டி இருக்கும், அதை தவிர்ப்பதற்காகவே டிரம்ப் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.